மறுமணம் செய்யப் போறீங்களா..? ரூ.50,000 + ஒரு சவரன் தங்கம் பெறுவது எப்படி..? தமிழ்நாடு அரசு அசத்தல் திட்டம்..!!

Marriage 2025 1

தமிழ்நாடு அரசு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் பொருளாதார வலுவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை ஊக்குவித்து, அவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டம் தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகும். 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் மூலம் எண்ணற்ற ஏழை, எளிய கைம்பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.


திட்டத்தின் நோக்கம் மற்றும் தகுதிகள் :

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள விதவை பெண்களுக்கு மறுமணத்தின் மூலம் ஒரு புதிய வாழ்வை தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்புவோர் சில அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் பெண் தமிழகத்தைச் சேர்ந்த கைம்பெண்ணாக இருக்க வேண்டும். திருமணத்தின் போது பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். மணமகனுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை.

மறுமணம் செய்து கொண்ட 6 மாதத்திற்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பது கட்டாயமாகும். இந்தத் திட்டத்தில், மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இரண்டு வகைகளில் நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கப்படுகின்றன.

திட்டம் 1ன் கீழ், மறுமணம் செய்துகொள்ளும் பெண் 8, 10, அல்லது 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால், அவருக்கு மொத்தமாக ₹25,000 நிதியுதவி வழங்கப்படும். இதில் ₹15,000 ரொக்கமாகவும், மீதமுள்ள ₹10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும் வழங்கப்படும். மேலும், தாலிக்கு 22 கேரட் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

அதே சமயம், கல்வித் தகுதி உயர்வாக இருக்கும் பெண்களுக்காக திட்டம் 2 செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பிரிவின் கீழ், மறுமணம் செய்துகொள்ளும் பெண் பட்டப்படிப்பு (Degree) அல்லது பட்டயப் படிப்பு (Diploma) முடித்திருந்தால், அவருக்கு மொத்தமாக ₹50,000 நிதியுதவி அளிக்கப்படும். இதில், ₹30,000 ரொக்கப் பணமாகவும், மீதித் தொகை ₹20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும் வழங்கப்படும். இந்த இரண்டு திட்டங்களின் கீழும், மறுமணம் செய்யும் பெண்களுக்குத் தாலி செய்வதற்காக 22 கேரட் 8 கிராம் தங்கம் கட்டாயம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தில் நிதியுதவி பெற விரும்பும் பெண்கள், தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்லலாம். அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய ஆவணங்கள் :

* முதல் கணவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் விதவைச் சான்றிதழ்.

* மறுமணத்தின் புகைப்படம் மற்றும் திருமண அழைப்பிதழ் (பத்திரிக்கை).

* ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ்.

* மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள்.

* மணமகனுக்கு இது முதல் திருமணம் என்பதற்கான சான்று.

* கணவன்-மனைவி இணைப்பு வங்கி கணக்குப் புத்தக நகல்.

விண்ணப்பப் படிவத்தை அதிகாரிகள் வழங்குவார்கள். அதைச் சரியாக நிரப்பி சமர்ப்பித்த பிறகு, ஆவணச் சரிபார்ப்பு முடிந்தவுடன், நிதியுதவித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

Read More : இன்று MLA பதவியை ராஜினாமா செய்கிறார் செங்கோட்டையன்..? சென்னை விரைந்த ஆதரவாளர்கள்..!! நாளை தவெகவில் இணைப்பு..?

CHELLA

Next Post

சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை.. முன்னறிவிப்பின்றி வங்கி கணக்கை முடக்கலாம்..!! - ஹைகோர்ட் முக்கிய தீர்ப்பு..

Wed Nov 26 , 2025
Suspicious money transactions.. Bank accounts can be frozen without prior notice..!! – Kerala High Court
bank 1

You May Like