இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ரயிலில் நகைகள் அல்லது முதலீட்டு தங்கத்தை எடுத்துச் செல்லும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம். இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பிற்காக விதிமுறைகளைத் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்த விதிகளை மீறுவோர் அபராதம் செலுத்த நேரிடலாம்.
இந்திய ரயில்வே விதிகளின்படி, தங்கம் என்பது சிறப்புப் பொருளாக கருதப்படாமல், பயணிகளின் மற்ற உடமைகளை போலவே ஒரு சரக்கு (Laggage) என்றே பார்க்கப்படுகிறது. எனவே, பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் எடை வரம்பிற்குள் மட்டுமே தங்கத்தை எடுத்துச் செல்ல முடியும்.
முதல் வகுப்பு ஏசி (70 கிலோ), ஏசி 2-டயர் (50 கிலோ), ஏசி 3-டயர் மற்றும் படுக்கை வசதி (40 கிலோ), மற்றும் இரண்டாம் வகுப்பு (35 கிலோ). இந்த எடை வரம்பை மீறி தங்கம் அல்லது வேறு பொருட்களை எடுத்துச் சென்றால், ரயில்வே அதிகாரிகள் கூடுதல் கட்டணம் அல்லது அபராதம் விதிக்க அதிகாரம் பெற்றுள்ளனர். சீரற்ற சோதனைகளின்போது எடை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், ரயிலில் தங்கம் எடுத்துச் செல்வது சட்டபூர்வமானது என்றாலும், அதற்கான உரிய ஆவணங்களை உடன் வைத்திருப்பது மிக அவசியம். குறிப்பாக, நகைகளை வாங்கியதற்கான ரசீது (பில்) போன்ற சட்டப்பூர்வமான ஆதாரங்களை எடுத்துச் செல்வது வரித்துறை சோதனையின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உதவும். கணக்கில் வராத வருமானம் அல்லது கடத்தல் மூலம் தங்கம் வாங்கப்பட்டதாகச் சந்தேகம் எழுந்தால், அதிகாரிகள் நகையைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
தங்கம் அதிக மதிப்புடைய பொருள் என்பதால், பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. நகைகளை எப்போதும் சரிபார்ப்புக்கு அனுப்பப்படும் பெரிய லக்கேஜ்களில் வைக்காமல், உங்கள் கைவசம் உள்ள சிறிய பையில் வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. அதிக அளவு தங்கத்தை ஒரே பையில் வைக்காமல், வெவ்வேறு பைகளில் பிரித்து வைப்பது நல்லது.
திருட்டு சம்பவங்களைத் தவிர்க்க, பொது இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் நகைகளைக் காட்சிப்படுத்துவதை தவிர்த்து, விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். இந்த எளிய விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் சிக்கலற்ற பயணத்தை உறுதி செய்யலாம்.
Read More : இருமல் மருந்து விவகாரம்..!! முக்கிய புள்ளி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!! சென்னையில் பரபரப்பு..!!



