மழைக்காலம் தீவிரமடையும் காலகட்டத்தில், இடி மற்றும் மின்னல் தாக்குதல்களால் இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மின்னல் எப்போது, எங்கே, எப்படி தாக்கும் என்பதைக் கணிக்க இயலாவிட்டாலும், வானிலை முன்னறிவிப்புகளைக் கவனிப்பதன் மூலம் உங்கள் பகுதியில் ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம்.
திறந்த வெளியில் சிக்கிக் கொண்டால் : திறந்தவெளிகளில் தனியாக இருந்தால், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படி செல்ல முடியாத சூழலில், உங்கள் காதுகளை மூடிக்கொண்டு, கால்விரல்களை தரையில் படுமாறு வைத்து, பின் பக்கத்தை தரையில் படாமல் உட்காரவும். இந்த நிலை, மின்னல் தாக்கினால் தரையில் மின்சாரம் பரவுவதில் இருந்து ஓரளவு பாதுகாக்கும். இடி அல்லது மின்னல் ஏற்படும்போது, உடனடியாக வயல்கள், மைதானங்கள், திறந்தவெளிகள், கூரைகள் மற்றும் உயரமான இடங்களை விட்டு வெளியேறுவது மிகவும் முக்கியம்.
வீட்டிற்குள் மற்றும் வெளியில் தவிர்க்க வேண்டியவை : மின்னல் தாக்கும்போது, வீடுகளில் உள்ள மின்னணு சாதனங்கள், கம்பிகள், தொலைபேசி இணைப்புகள், மற்றும் குழாய் நீருடன் இணைக்கப்பட்ட உலோகக் குழாய்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மின்னல் காரணமாக உருவாகும் மின்னோட்டம் இவற்றின் வழியாகவும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல, இடி அல்லது மழையிலிருந்து தப்பிக்க ஒருபோதும் மரங்களின் அடியில் ஒதுங்க வேண்டாம்.
தனித்து நிற்கும் மரங்களை மின்னல் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம், அதன் அடியில் நிற்பவர்கள் மின்னல் தாக்குதலுக்கு ஆளாக நேரிடலாம். மேலும், வெளியில் இருக்கும்போது மின்னல் தாக்கும்போது, செல்போன் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது மின்சார அதிர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வாகனங்களுக்குள் பாதுகாப்பு : கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் போன்ற உலோகத்தால் மூடப்பட்ட வாகனங்கள், மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய சிறந்த இடங்களாக கருதப்படுகின்றன. எனினும், வாகனத்துக்குள் இருக்கும்போது ஜன்னல்களைத் திறக்கக் கூடாது, வெளியே உள்ள எந்த உலோகப் பகுதியையும் தொடக் கூடாது. நீங்கள் ஒரு குழுவாக வெளியே இருக்கும்போது இடி அல்லது மின்னல் தாக்கினால், ஒருவர் மற்றவருடன் நெருங்கி நிற்காமல் தனித்தனியே விலகி நிற்க வேண்டும். ஏனெனில், ஒரு குழுவாக நிற்பவர்களுக்கு மின்னல் தாக்கும்போது அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவசர சிகிச்சை : அருகில் இருக்கும் யாருக்காவது இடி அல்லது மின்னல் தாக்கிவிட்டால், சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். அங்கு சிபிஆர் (CPR) தெரிந்தவர்கள் இருந்தால், பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அதைச் செய்து உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம். பொதுவாக, மின்னலானது உயரமான இடங்கள் மற்றும் உலோகப் பொருட்களால் ஈர்க்கப்படுகிறது. எனவே, தரையில் இருந்தும் உலோகப் பொருட்களில் இருந்தும் உங்களை விலக்கி வைத்திருப்பதே மின்னல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளச் சிறந்த வழியாகும்.



