கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதன் தாக்கம் மனித உடலில் தொடர்ந்து இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், மனிதர்களின் மூளை வழக்கத்தை விட 6 மாதங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாக இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்தான் அல்ல, அவர்களுடன் வாழ்ந்த, பாதிக்கப்படாதவர்களின் மூளையின் செயல்பாடுகளும், வழக்கத்தைவிட வயதாகி விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட தனிமை, சமூக விலகல், தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால், மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் மூளை, இயற்கையாக ஏற்படும் முதிர்ச்சியை விட, கொரோனா காலத்திற்கு பின் சுமார் 6 மாதங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாக ‘Nature Communications’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஆண்களில் அதிகமாகவே காணப்படுவதாகவும், பெண்களை விட அவர்களது மூளை செயல்பாடுகள், அதிக அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளன என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
கொரோனா தொற்றுக்குப் பிந்தைய மனநலம் மற்றும் மூளை செயல்பாடுகள் குறித்த ஆய்வில், வயதானதின் தாக்கம் அனைத்துப் பிரிவினரிடமும் இருந்தாலும் ஆண்களும், சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.