உணவுப் பிரியர்கள் மத்தியில் ‘சில்லி பொட்டேட்டோ’ மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி. காரம், மொறுமொறுப்பு மற்றும் தனித்துவமான சுவை காரணமாக இது பலரின் விருப்பமான உணவாக உள்ளது. ஆனால், உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக நீங்கள் இருந்தால், இந்த சுவையான உணவு குறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில்லி பொட்டேட்டோ உணவில் சேர்க்கப்படும் மசாலாக்கள் அல்ல, மாறாக அதைத் தயாரிக்கும் முறையும், பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவும்தான் இதைச் சிறுநீரகங்களுக்கு ஆபத்தான உணவாக மாற்றுகிறது.
சிறுநீரக பாதிப்புக்கு காரணம் என்ன..?
சில்லி பொட்டேட்டோவை அடிக்கடி சாப்பிடும்போது, அதில் உள்ள அதிகப்படியான சோடியம், பொட்டாசியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் காரணமாகச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், உப்பு, மாவுச்சத்து (ஸ்டார்ச்) மற்றும் ‘நன்கு வறுக்கும்’ செயல்முறை ஆகியவை சேர்ந்து, ஓர் எளிய காய்கறியைச் சோடியம் நிறைந்த ஸ்நாக்ஸாக மாற்றிவிடுகின்றன.
உருளைக்கிழங்கில் அதிக பொட்டாசியம் : உருளைக்கிழங்கில் இயற்கையாகவே பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இதை எளிதாக வடிகட்டி வெளியேற்றும். ஆனால், சிறுநீரகச் செயல்பாடு குறைவாக இருப்பவர்களுக்கு, இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்து, இதயத் துடிப்பில் ஆபத்தான மாற்றங்களை அல்லது தசை பலவீனத்தை ஏற்படுத்தலாம். கட்டுப்பாடில்லாமல் சில்லி பொட்டேட்டோ சாப்பிடுவது, பாதுகாப்பான பொட்டாசியம் அளவை எளிதில் கடந்துவிடும்.
அதிகப்படியான வறுத்த எண்ணெய் : பெரும்பாலான உணவகங்களில், இந்த டிஷ் ‘மொறுமொறுப்பாக’ இருக்க இரண்டு முறை எண்ணெயில் வறுக்கப்படுகிறது. பின்னர், எண்ணெய் கலந்த சாஸ்களில் மீண்டும் கலக்கப்படுகிறது. இந்த முறை, தேவையற்ற கொழுப்பைச் சேர்ப்பதுடன், உடலில் அழற்சியை (Inflammation) தூண்டி, சிறுநீரகங்களுக்கு வளர்சிதை மாற்ற அழுத்தத்தை (Metabolic Stress) அதிகரிக்கிறது.
உப்பு மற்றும் சாஸ் ஆதிக்கம் : சில்லி பொட்டேட்டோ ரெசிபிகளில் சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் அதிக உப்பு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் கலவை அதிக சோடியத்தை உருவாக்குகிறது. அதிக சோடியம் நுகர்வு இரத்த அழுத்தத்தை அதிகரித்து, ஏற்கெனவே இருக்கும் சிறுநீரக நோயை மோசமாக்கும். மேலும், சாஸ்களில் உள்ள சர்க்கரையும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.
Read More : வீட்டில் எந்த துளசி செடியை வைக்க வேண்டும்..? எந்த கிழமையில் எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும்..?



