தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பல்வேறு பிராண்டுகள் ஷாப்பிங் பிரியர்களைக் கவரும் வகையில் கேஷ்பேக், தள்ளுபடிகள், ஃப்ளாஷ் சேல்கள் மற்றும் ஜீரோ காஸ்ட் EMI போன்ற கவர்ச்சிகரமான கிரெடிட் கார்டு சலுகைகளை அள்ளி வீசுகின்றன. எனினும், இந்தச் சலுகைகளில் எச்சரிக்கையின்றி மூழ்கிவிடுவதால், எதிர்பாராத அபராதங்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜீரோ காஸ்ட் EMI :
ஜீரோ காஸ்ட் EMI (No-Cost EMI) திட்டங்களில் வட்டி இல்லை என்று நம்பப்பட்டாலும், உண்மையில் பொருளின் விலையை உயர்த்துதல் அல்லது செயலாக்கக் கட்டணம் போன்ற மறைமுகக் கட்டணங்கள் இதில் அடங்கியிருக்கும். இந்தத் திட்டம் கவர்ச்சியாகத் தோன்றினாலும், நீங்கள் ஏதேனும் ஒரு தவணையைச் செலுத்தத் தவறினால், அதற்கான பெரிய அபராதங்களை செலுத்த நேரிடும். எனவே, EMI-க்கு மாறுவதற்கு முன், அந்தப் பொருளின் உண்மையான சந்தை விலை என்ன என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.
கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு :
நீங்கள் ஒரு தவணையைத் தாமதமாகச் செலுத்தினால், தாமதக் கட்டணங்களுடன் சேர்த்து 30% முதல் 45% வரையிலான அதிக வட்டி விகிதத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். இது கிரெடிட் ரிப்போர்ட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, வருங்காலத்தில் கடன் பெறுவதைத் தடுக்கலாம். மேலும், குறைந்தபட்ச தொகையை (Minimum Due) மட்டுமே செலுத்தி வந்தால் வட்டி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகும். எனவே, முழுத் தொகையையும் சரியான நேரத்தில் செலுத்துவதே பாதுகாப்பான அணுகுமுறை.
வரம்பை மீறாதீர்கள் :
சலுகைகளைக் கண்டு கிரெடிட் கார்டு வரம்பை மீறிச் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வரம்பில் 40% சதவீதத்திற்கு மேல் பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும். பெரிய அளவிலான ஷாப்பிங் செய்யும்போது, பணத்தைச் செலுத்தும் முறையைப் பிரித்து (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, UPI) பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
அதேபோல், கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுப்பது வசதியாகத் தோன்றினாலும், பணம் எடுத்த நாள் முதலே வட்டி தொடங்குகிறது; அதற்குக் கட்டணமாக 3% வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, அவசரத் தேவைகளுக்காக மட்டுமே பணத்தை எடுக்க வேண்டும் என்று நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தீபாவளி சலுகைகள் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் சிக்காமல் இருக்க, ஒரு பொருளின் விலையை பல்வேறு ஆன்லைன் தளங்கள் மற்றும் கடைகளில் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே வாங்க வேண்டும். சலுகையில் கிடைக்கிறது என்பதற்காக அவசியம் இல்லாத எந்த ஒரு பொருளையும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
Read More : மகளிர் உரிமைத்தொகை..!! விண்ணப்பித்த அனைவருக்கும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1,000..!! உதயநிதி அறிவிப்பு



