ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, இந்தியர்கள் தற்போது உணவில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அரிசியில் ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுவதால், பலர் உடல் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம் போன்ற காரணங்களை கூறி, தங்கள் உணவில் இருந்து அரிசியை முற்றிலுமாக நீக்கி வருகின்றனர். ஆனால், இந்த முயற்சி உடலுக்குத் தீமையையே விளைவிக்கும் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கார்போஹைட்ரேட்டுகளை நீக்குவதால் ஏற்படும் விளைவு :
மும்பையைச் சேர்ந்த எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணரும், சுகாதார கல்வியாளருமான டாக்டர். மனன் வோரா இதுகுறித்து விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், “அரிசி வீக்கத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கை முற்றிலும் தவறானது. நமது ஆரோக்கியத்தில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடலின் தசைகள் சரியாகச் செயல்படவும், உடற்பயிற்சிக்குப் பின் மீண்டு வரவும் கிளைகோஜன் என்ற ஆற்றல் தேவை. இந்த கிளைகோஜன் நமக்குக் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்துதான் கிடைக்கிறது.
நீங்கள் அரிசி போன்ற கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலும் நிறுத்திவிட்டால், கிளைகோஜன் அளவு குறைந்து, தசைகள் விரைவில் சோர்வடையும். தசைகள் வலுவிழந்தால், எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கான ஆதரவு குறைந்து, உடல் வலி மற்றும் பலவீனம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே, உடல் எடையைக் குறைக்க கார்போஹைட்ரேட்டுகளை முழுமையாக நீக்குவது தசை ஆரோக்கியத்தைப் பாதித்து, உடலுக்குத் தேவையான சக்தியைக் குறைக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
அரிசியின் நன்மைகள் :
அரிசி எளிதில் செரிமானமாகக்கூடிய, விரைவான ஆற்றலை வழங்கும் சிறந்த உணவாகும். இது இயற்கையாகவே பசையம் (Gluten) அற்றது மற்றும் கொழுப்பு, சோடியம் அளவு மிகக் குறைவு. பி வைட்டமின்கள், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. மேலும், மூளை, தசைகள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான குளுக்கோஸை அரிசி வழங்குகிறது.
நிபுணரின் கூற்றுப்படி, டயட் என்பது ஒரு உணவை முற்றிலும் கைவிடுவதல்ல. மாறாக, நம் உடலுக்கு எது, எவ்வளவு தேவை என்பதை அறிந்து சீரான அளவில் எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமான வழி. அரிசியை முழுமையாக நீக்குவதை விட, அதைச் சரியான சமநிலையுடன் எடுத்துக்கொள்வது தசை வலிமை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் முழு உடல் ஆற்றலுக்கும் அவசியமானது என்று டாக்டர். மனன் வோரா தெளிவுபடுத்தியுள்ளார்.



