முருகப் பெருமானின் அருளாற்றல் அன்னை பராசக்தியிடம் இருந்து ‘சக்தி வேலாக’ உருவெடுத்து, தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய மகோன்னத தினமே தைப்பூச திருநாளாகும். சிவபெருமானின் பேராற்றலும், அன்னையின் கருணையும் இணைந்து உருவான அந்த ஞானவேல் முருகனின் திருக்கரம் சேர்ந்த இந்த நன்னாளில், முருகனை வழிபடுவது நமது வாழ்க்கையில் உள்ள தடைகளைத் தகர்க்கும் என்பது ஐதீகம். வரும் தைப்பூசத் திருநாளில் விரதமிருந்து முருகனின் பேரருளை பெற விரும்பும் பக்தர்களுக்காக, ஒரு முழுமையான வழிபாட்டு முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தைப்பூச விரதத்தைப் பொறுத்தவரை 48 நாட்கள், 21 நாட்கள் என தங்களின் வசதிக்கேற்ப பக்தர்கள் கடைபிடித்தாலும், தைப்பூசத்தன்று மட்டும் விரதம் இருப்பவர்களுக்கும் சில அடிப்படை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. விரதமிருப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராடி, முதலில் குலதெய்வத்தை வணங்கி அகல் தீபம் ஏற்ற வேண்டும்.
பின்னர், முருகப் பெருமானுக்கு நெய் தீபமிட்டு விரதத்தை தொடங்கலாம். வீட்டில் ‘வேல்’ வைத்திருப்பவர்கள் அதற்குப் பால், பன்னீர் அல்லது இளநீர் கொண்டு அபிஷேகம் செய்வது, முருகனையே நேரில் பூஜிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. மாலையில் முருகனுக்கு உகந்த ‘ஷட்கோண கோலம்’ இட்டு, ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது குடும்பத்தில் ஐஸ்வர்யத்தை பெருக்கும்.
வழிபாட்டின் போது ‘ஓம் சரவணபவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்துச் சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது. அதேபோல் வேல்மாறல், வேல் விருத்தம் போன்ற துதிகளை வாசிப்பது மனவலிமையை தரும். உணவைப் பொறுத்தவரை, உடல்நிலை அனுமதிப்பவர்கள் முழு உபவாசமாக இருக்கலாம். இயலாதவர்கள் உப்பில்லாத உணவு அல்லது சமைக்காத இயற்கை உணவுகளை உட்கொள்ளலாம். ஆனால், விரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். கோவிலுக்குப் பால் அபிஷேகத்திற்காகப் பால் கொண்டு செல்பவர்கள், வெறும் கால்களுடன் செல்வதே முருகனுக்கு நாம் காட்டும் மிகச்சிறந்த பக்தியாகும்.
மலைக் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்வது, கிரிவலம் வருவது மற்றும் காவடி எடுத்தல் போன்றவை தைப்பூசத்தின் மிக முக்கியமான நேர்த்திக்கடன்களாகும். ஒருவேளை கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் முருகப் பெருமானுக்குத் திணை மாவு, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்துத் தீப ஆராதனை காட்டி விரதத்தை நிறைவு செய்யலாம். விரதத்தின் பயனாக குறைந்தது ஒருவருக்காவது அன்னதானம் வழங்குவது அல்லது ஜீவராசிகளுக்கு உணவிடுவது முருகனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத்தரும்.
Read More : தங்கம் விலை இனி குறையாது.. மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு..! பொருளாதார ஆய்வறிக்கையில் அம்பலம்!



