தற்போதைய காலகட்டத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பது தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு நிறுத்தலாம் என்று ஆரம்பிப்பவர்கள், பல மணி நேரங்களைக் கடந்து அதிலேயே மூழ்கிப் போவதைப் பார்க்க முடிகிறது. இந்த அதீதப் பழக்கம், மகிழ்ச்சி தருவது போலத் தோன்றினாலும், நீண்டகாலத்தில் பல ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும், மனநலப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மன அழுத்தமும் குழப்பமும்
சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, பல நோய்களுக்கும் அடித்தளமிடுகிறது. ரீல்ஸ் பார்ப்பவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் தினசரி அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக ரீல்ஸ் பார்க்கும்போது, ஒரு காணொளியில் மகிழ்ச்சி, அடுத்த காணொளியில் கவலை என அடுத்தடுத்த உணர்வுகள் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கும். இந்த அதிவேக உணர்வு மாற்றம் நம்முடைய மூளையைச் சோர்வடையச் செய்கிறது. மேலும், இது மன அழுத்தத்தை அதிகமாக்கும்.
ஒரு காணொளியில் ஒரு விஷயம் ‘சரி’ என்று வலியுறுத்தப்பட்டால், அடுத்த காணொளியில் அதே விஷயம் ‘தவறு’ என்று காட்டப்படலாம். இதுபோன்ற முரண்பட்ட தகவல்களைப் பார்க்கும்போது, அது தனிநபரின் வாழ்க்கையில் ஒருவிதமான குழப்பத்தையும், முடிவெடுக்கும் திறனில் பின்னடைவையும் உண்டாக்கும்.
உயர் ரத்த அழுத்த அபாயம்
அதிக ரீல்ஸ் பார்ப்பதால் ஏற்படும் மோசமான உடல்நலக் குறைபாடுகள் குறித்து ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஆய்வுகளின்படி, ரீல்ஸ் போன்ற குறுகிய காணொளிகளை அதிகமாகப் பார்ப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம், ரீல்ஸ் பார்ப்பதால் தூக்கத்தின் தரம் கடுமையாகக் குறைகிறது.
ரீல்ஸ் பார்ப்பது என்பது நமது நரம்பு மண்டலத்தைத் தூண்டி, உடலைத் தொடர்ந்து ஒரு பதட்டமான நிலைக்குக் கொண்டு செல்கிறது. தூங்குவதற்கு முன் அல்லது நள்ளிரவில் ரீல்ஸ் பார்ப்பது இந்த விளைவை இன்னும் மோசமாக்குகிறது. தூக்கம் பாதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடல்நலனையும் பாதித்து, உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ரீல்ஸ் பார்ப்பதைக் கட்டுப்படுத்துவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
Read More : ஃப்ரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா..? நீங்கள் தான் காரணம்..!! நிபுணர்கள் சொல்லும் ரகசிய பராமரிப்பு டிப்ஸ்..!!



