இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. அந்த வகையில் நாய், காலபைரவரின் வாகனமாக கருதப்படுகிறது. அதனால்தான், பலரும் நாய்களை பைரவரின் வடிவமாக கருதி வழிபடுகின்றனர். பைரவரின் அருளை பெற, நாய்களுக்கு உணவளிப்பது ஒரு முக்கியமான பரிகாரமாகவும், வழிபாடாகவும் பார்க்கப்படுகிறது.
பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக, அவரது ருத்ர வடிவமாக கருதப்படுகிறார். சிவாலயங்களில் நந்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போலவே, பைரவருக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. காசி மாநகரம் உட்பட அனைத்து சிவாலயங்களுக்கும் இவரே காவல் தெய்வமாக இருந்து காப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், காலத்தை கட்டுப்படுத்தும் கடவுளாகவும் காலபைரவர் விளங்குகிறார். இதனால், துன்பங்களில் இருப்பவர்கள் ராகு காலத்தில் பைரவரை வழிபடுவது வழக்கம். சிவன் கோவில்களில் விநாயகருக்கு முதல் பூஜை நடப்பது போல, பைரவருக்கே கடைசி பூஜை நடக்கிறது. கோவிலை மூடிய பின், சாவியை பைரவர் சன்னிதியில் வைக்கும் வழக்கம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
காலபைரவர் ஏன் நாயை வாகனமாக வைத்துள்ளார் என்பதற்கு ஒரு காரணமும் உண்டு. காலச்சக்கரத்தை இயக்குபவராக காலபைரவர் இருக்கிறார். காலை, மாலை, இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் நவகிரகங்கள், எட்டு திசைகள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றை இயக்குபவரும் இவரே. ஒரு காவலாளியைப் போல், நாய்களும் இரவில் விழித்திருந்து காவல் காக்கும்.
அதேபோல, காலபைரவரும் எப்போதும் சுழன்றுகொண்டு, அனைத்து இடங்களிலும் சென்று காவல் காப்பவர். அதனால் தான் நாய்களை தனது வாகனமாக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கோவிலை மூடிய பிறகு பைரவர் உட்பட காவல் தெய்வங்கள் கோவிலுக்குள் உலா வந்து காவல் காப்பதால், இரவில் எந்த ஆலயத்தையும் மீண்டும் திறக்க மாட்டார்கள்.
பைரவர் சிவ பக்தர்களுக்கும் காவலாக இருக்கிறார். சதுரகிரி, திருவண்ணாமலை போன்ற தலங்களுக்கு செல்லும் சில சிவ பக்தர்களுடன் ஒரு நாய் துணைக்கு வருவதை பலரும் அனுபவ ரீதியாக கண்டிருக்கிறார்கள். கடன் பிரச்சனை, நவகிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபட்டால், எவ்வளவு பெரிய துன்பமும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
Read More : 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில்..!! ஆறுபடை வீடும் ஒரே இடத்தில்..!! தீராத தோஷம் கூட தீரும்..!!