சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. கடும் உழைப்பிற்குப் பின்னரும், ஏதோ ஒரு வகையில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால், அத்தகையோரின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஒரு விசேஷமான ஆன்மீக வழிபாடாக இந்த ‘மண்பானை பூஜை’ கருதப்படுகிறது.
நிலம் மற்றும் சொத்துக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதுடன், பூமி தேவியின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வழிபாடே இது. இந்த பூஜையை செய்வதற்கு, புதிதாக வாங்கப்பட்ட ஒரு சிறிய மண்பானை தேவை. அந்தப் பானையை சுத்தம் செய்து, சுற்றிலும் மஞ்சள் பூசி, குங்குமம் வைக்க வேண்டும். நாம் தற்போது குடியிருக்கும் வீட்டின் முன் பகுதியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து, அந்த மண்பானையில் கழுத்து வரை நிரப்ப வேண்டும்.
பின்னர், பானையை மூடுவதற்கு ஒரு வெள்ளை துணியை எடுத்து, அதில் மஞ்சள் மற்றும் பன்னீரைத் தடவி நிழலில் காய வைத்துத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். வழிபாட்டைத் தொடங்க, உங்கள் நட்சத்திரத்திற்குச் சந்திராஷ்டமம் இல்லாத ஒரு நல்ல நாளாகப் பார்த்து, பூஜை அறையில் ஒரு பித்தளைத் தட்டை வைக்க வேண்டும். அதன் மேல் பச்சரிசியைக் கொட்டி, அதன் மீது மண்ணால் நிரப்பப்பட்ட மண்பானையை வைக்க வேண்டும்.
அந்தப் பானைக்குள் 101 ஒரு ரூபாய் நாணயங்களைப் போட வேண்டும். பிறகு, நாம் தயார் செய்து வைத்திருந்த மஞ்சள் துணியால் பானையை நன்றாகக் கட்டிவிட வேண்டும். கட்டிய அந்தத் துணிக்கு மேல், மூன்று சிவப்பு நிற ரோஜா மலர்களை வைத்து, “ஓம் நமோ பூமியை நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி, ஊதுபத்தி, சாம்பிராணி, தூபம் காட்டி வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு தினமும் மூன்று ரோஜா பூக்களை வைத்து, அதே மந்திரத்தைச் சொல்லி பூஜித்து வர வேண்டும். இந்தத் தொடர் வழிபாட்டின் மூலம் பூமி தேவியின் அருளால் சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் விரைவில் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. சொந்த வீடு வாங்கிய பிறகு, மண்பானையில் இருக்கும் மண்ணை நாம் வாங்கிய புதிய வீட்டின் வாசலில் போட்டுவிட வேண்டும்.
மேலும், அந்த மண்பானையில் இருந்த 101 ஒரு ரூபாய் நாணயங்களையும் பெருமாள் கோவில் உண்டியலில் சேர்த்துவிட வேண்டும். இதன் மூலம் கனவாக இருந்த சொந்த வீடு அமையும் என்று ஆன்மீக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : உலகிலேயே மிகப்பெரிய சனீஸ்வரர் கோயில் தமிழ்நாட்ல தான் இருக்கு..!! இங்கு வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும்..!!