தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு அதிரடி நடவடிக்கையாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உள்ள 1.31 கோடி பயனாளிகளுக்கும் தலா ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13 அன்று காலை 5 மணிக்கே பெண்களின் செல்போன்களுக்கு வந்த மெசேஜ்கள், ஒரு நிமிடம் அவர்களை திகைக்க வைத்தன.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒரே தவணையாக இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பயன் பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும், தகுதி இருந்தும் பல்வேறு காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் ஒருவித ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 15-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், ரேஷன் கார்டு மற்றும் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது ஏன்..?
அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி, வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், அதிக மின்சாரப் பயன்பாடு கொண்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படுவதில்லை. இருப்பினும், பல வீடுகளில் தகுதி இருந்தும் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ரேஷன் கார்டில் பெயர் நீக்கப்படாத வாரிசுகள் வருமான வரி செலுத்துபவர்களாக இருந்தால், அந்த வீட்டுத் தலைவிக்கு தொகை கிடைக்காது. அதேபோல் ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பில் உள்ள பிழைகளும் முக்கியக் காரணமாகின்றன. தவறுகளைத் திருத்த அரசு ஏற்கனவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறப்பு முகாம்களை நடத்தியது.
அப்போதும் விடுபட்டவர்கள், அரசு அறிவித்துள்ள மாதாந்திரப் பொது விநியோகத் திட்ட (PDS) குறைதீர் முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் இந்த முகாம்களில், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் வங்கிக் கணக்கு இணைப்பில் உள்ள சிக்கல்களை சரி செய்யலாம்.
எனவே, தற்போது வரவு வைக்கப்பட்டுள்ள ரூ.5,000-த்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, விடுபட்ட பெண்கள் உடனடியாக தங்களது தகுதிக்குத் தடையாக இருக்கும் காரணங்களை கண்டறிய வேண்டும். ஆவணங்களைச் சரிசெய்துவிட்டு, மீண்டும் அதிகாரப்பூர்வ தளம் வழியாகவோ அல்லது அடுத்த முறை வரும் சிறப்பு முகாம்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விடுபட்ட தொகையை எண்ணி வருந்தாமல், இனி வரும் மாதங்களில் தொடர்ச்சியாக உரிமைத் தொகையைப் பெற இப்போதே ஆவணங்களை தயார் செய்வதுதான் புத்திசாலித்தனம்.



