இன்றைய டிஜிட்டல் உலகில், நமது அந்தரங்க தகவல்கள் (Data) நமக்கு தெரியாமலேயே மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், நமது தேடல்களை கவனித்து அதற்கேற்ப விளம்பரங்களைக் திணிப்பதோடு மட்டுமல்லாமல், நமது டிஜிட்டல் அடையாளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. குறிப்பாக, கீழ்க்கண்ட 3 வகை செயலிகளைப் பயன்படுத்துவதில் அதீத எச்சரிக்கை தேவை என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இலவச VPN செயலிகள் :
இணையத்தில் நமது அடையாளத்தை மறைத்து பாதுகாப்பளிப்பதாக கூறிக்கொள்ளும் ‘இலவச VPN’ செயலிகள்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகின்றன. இலவசமாக சேவை வழங்கும் இந்த நிறுவனங்கள், உண்மையில் பயனர்களின் இணையச் செயல்பாடுகள், பார்வையிடும் இணையதளங்கள் மற்றும் பயன்படுத்தும் செயலிகள் ஆகியவற்றை ரகசியமாகப் பதிவு செய்கின்றன. இந்தத் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலமே அவை லாபம் ஈட்டுகின்றன. சுருக்கமாக சொன்னால், உங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் கருவியே உங்களை வேவுபார்க்கும் கருவியாக மாறுகிறது.
‘யூட்டிலிட்டி’ செயலிகள் :
பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்களில் டார்ச்லைட், போன் கிளீனர் போன்ற வசதிகள் ஏற்கனவே உள்ளமைக்கப்பட்டுள்ளன (In-built). இருப்பினும், கூடுதல் வசதிகளுக்காகப் பலர் ஃபிளாஷ்லைட், பூஸ்டர் மற்றும் கிளீனர் போன்ற செயலிகளைத் தனியாகப் பதிவிறக்கம் செய்கிறார்கள். ஒரு சாதாரண டார்ச்லைட் செயலிக்கு உங்கள் இருப்பிடம், கேலரி மற்றும் இணைய அணுகல் போன்ற அனுமதிகள் எதற்கு? இத்தகைய செயலிகள் போனைச் சுத்தம் செய்வதை விட, உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றன என்பதை பயனர்கள் உணர வேண்டும்.
எடிட்டிங் செயலிகள் :
புகைப்படங்களை அழகாக்கும் ஃபோட்டோ எடிட்டிங் மற்றும் முகத் தோற்றத்தை மாற்றும் ஃபில்டர் செயலிகள் இளைஞர்களிடையே பிரபலம். ஆனால், இவை உங்கள் புகைப்படங்களை அவற்றின் சர்வர்களில் பதிவேற்றுகின்றன. அந்தப் புகைப்படங்கள் எப்போது நீக்கப்படும் அல்லது எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. குறிப்பாக, உங்கள் முக அடையாளங்கள் தவறான கைகளில் கிடைத்தால், அது உங்களின் டிஜிட்டல் அடையாளத்தைத் திருடவும் வழிவகுக்கும்.
தற்காத்துக் கொள்வது எப்படி..?
பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள ‘Settings’ பகுதிக்குச் சென்று, ‘Privacy’ அல்லது ‘Permissions’ பிரிவை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். ஒரு செயலிக்கு அதன் செயல்பாட்டிற்கு தொடர்பில்லாத அனுமதிகள் (உதாரணமாக: கேம்கேல்குலேட்டர் செயலிக்கு தொடர்பு எண்கள் அனுமதி) கேட்கப்பட்டால், உடனடியாக அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தேவையற்ற செயலிகளை நீக்குவதும், நம்பகமான நிறுவனங்களின் செயலிகளை மட்டும் பயன்படுத்துவதும் உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும்.



