மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை, தேர்தல் ஆணையம் இம்மாதம் 6-ம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சாலையின் உயரத்திற்கு ஏற்ப தரைதளம் அமைக்கப்படுவதுடன் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலிகளில் எளிதாக செல்லும் வகையில் சாய்தளம் அமைக்கப்படுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வாக்காளர் தகவல் சீட்டுகள் பிரெய்லி அம்சங்களுடன் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகள் 1961 பிரிவு 49-N-ன்படி வாக்குச் சாவடிகளில் கண் பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தங்களுடன் துணைக்கு ஒரு நபரை அழைத்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.