சொந்த வீடு கனவுடன் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2025-26ன் கீழ் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், வீடு கட்டுவதற்காகக் கூடுதலாகக் கடன் பெற வசதியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு “லோன் மேளா” முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டுக்காக மொத்தம் 1,700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பயனாளிகள் தங்கள் வீடுகளை எவ்விதத் தடையுமின்றி கட்டி முடிக்க ஏதுவாக, வட்டார அளவில் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் வசதி வழங்கப்பட உள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஒப்புதலுடன், பயனாளிகள் கூடுதலாக ரூ. 1 லட்சம் வரை கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு லோன் மேளா, இனிமேல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10 மணிக்கு மண்டல அலுவலர்கள் தலைமையில் நடைபெறும்.
இந்த முகாமில், வங்கியின் முகாம் அலுவலர்கள் சேமிப்புக் கணக்கு படிவம் மற்றும் கடன் விண்ணப்பங்களை அன்றைய தினமே பூர்த்தி செய்ய வசதியாக கொண்டு வருவார்கள். பயனாளிகள் அனைவரும் லோன் மேளாவில் பங்கேற்க வரும்போது, இரண்டு ஜாமீன்தாரர்களை உடன் அழைத்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேவையான ஆவணங்கள் :
* கலைஞர் கனவு இல்லம் ஒதுக்கீட்டு ஆணையின் அசல்.
* மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 3.
* மனுதாரர் மற்றும் இரண்டு ஜாமீன்தாரர்களின் ஆதார் அட்டை.
* குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள்.
* மனுதாரரின் பான் கார்டு நகல்.
* சாதிச் சான்றிதழ் நகல்.
எனவே, கலைஞரின் கனவு இல்லம் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் அனைவரும், அந்தந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் இந்த லோன் மேளாவில் தவறாமல் கலந்துகொண்டு, பணியில் இருக்கும் வங்கி ஊழியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை தொடர்புகொண்டு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இது, வீடு கட்டும் கனவை விரைவாக நனவாக்க உதவும் ஒரு சிறப்பான முயற்சியாகும்.
Read More : புகைப்பழக்கத்தின் மறைக்கப்பட்ட ஆபத்து..!! நுரையீரலை தாண்டி இந்த உறுப்பும் கடுமையாக பாதிக்கும்..!!



