ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆசிய கோப்பை தொடர் ட்துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசம் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிஷாத் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து கில் வெளியேறினார்.
மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்ட ஷிவம் துபே, 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் ரிஷாத் கைப்பற்றினார். 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா, ரன் அவுட் ஆனார். அது இந்த ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து திலக் வர்மாவும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
6-விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்டியாவும், அக்சர் படேலும் 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஹர்திக் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். அக்சர் 10 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது சைப் ஹசன் ஆட்டம்தான். அவர் 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். பர்வேஸ், 21 ரன்கள் எடுத்தார். அவர்களை தவிர மற்ற அனைத்து வங்கதேச பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் 3, வருண் மற்றும் பும்ரா தலா 2, அக்சர் மற்றும் திலக் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
Readmore: இந்தியாவை டார்கெட் செய்த Gen Z இளைஞர்கள்!. கட்டுக்கடங்காத வன்முறை!. லேவில் ஊரடங்கு உத்தரவு!.