ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில், கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நம்பிக்கையை பாகிஸ்தான் தக்க வைத்துக் கொண்டது.
2025 ஆசியக்கோப்பை தொடரானது முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஒரு தோல்வி கூட அடையாமல் ஒருபக்கம் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தோல்விக்கு பிறகு வெற்றிபெற்றே ஆகவேண்டிய வாழ்வா சாவா மோதல் போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன.
சூப்பர் 4 சுற்று மோதலில் பாகிஸ்தான் இந்தியாவிடமும், இலங்கை, வங்கதேசத்திடமும் தோல்வியுற்றன. இரண்டு தோல்விக்கு பிறகு வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பில் உயிர்ப்புடன் இருக்கும், மற்ற அணி ரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகளின் தோல்வியை பொறுத்த வாய்ப்பை பெறும்நிலைக்கு செல்லும்.
அந்தவகையில் நேற்றையை போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் குசால் மெண்டீஸை கோல்டன் டக்கில் வெளியேற்றிய ஷாஹீன் அப்ரிடி, அடுத்த ஓவரில் பதும் நிசாங்காவையும் வெளியேற்றினார். அடுத்தடுத்த வந்த வீரர்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இலங்கை அணி இழக்க மிடில் ஆர்டரில் களமிறங்கிய கமிந்து மெண்டீஸ் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 44 பந்துகளுக்கு 50 ரன்கள் அடித்து அணியை 133 ரன்களுக்கு எடுத்துவந்தார்.
134 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹுசைன் தலத் மற்றும் முகமது நவாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நம்பிக்கையை பாகிஸ்தான் தக்க வைத்துக் கொண்டது.
மறுபுறம், சூப்பர் ஃபோர் சுற்றில் இலங்கை தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும், இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது. 2025 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையையும் இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
சூப்பர் 4 சுற்றில் அடுத்த போட்டிகள்:
செப்டம்பர் 24 (இன்று)- இந்தியா vs வங்கதேசம்
செப்டம்பர் 25 (நாளை) – பாகிஸ்தான் vs வங்கதேசம்
செப்டம்பர் 26 – இந்தியா vs இலங்கை அணிகள் மோதுகின்றன.



