அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், அந்த மாநில மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4.17 மணி அளவில், மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அசாமின் மோரிகான் (Morigaon) மாவட்டத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு உருவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அசாமின் பல்வேறு மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. அதிகாலையில் திடீரென வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்கள் வரை மக்கள் வீட்டுக்குள் செல்ல அஞ்சி சாலைகளிலேயே காத்திருந்தனர். குறிப்பாக மோரிகான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வின் தாக்கம் சற்று கூடுதலாகவே உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான கட்டிடச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. மாவட்ட நிர்வாகமும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலைமை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Read More : தடாலடி அறிவிப்பு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை..!! அதிமுகவின் மெகா வாக்குறுதி..!!



