மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட அகதிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பேருந்து தீப்பற்றியது. இதில் 17 குழந்தைகள் உட்பட குறைந்தது 71 பேர் உயிரிழந்தனர் என மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி மற்றும் உள்ளூர் போலீசார் உறுதிப்படுத்தினர்.
பேருந்து அதிக வேகத்தில் அலட்சியமாக ஓட்டப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஹெராத் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் சமீபத்தில் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள். அவர்கள் எல்லைக் கடக்கும் இடமான இஸ்லாம் காலாவில் வாகனத்தில் ஏறி தலைநகர் காபூலுக்குச் சென்று கொண்டிருந்ததாக மாகாண அதிகாரி முகமது யூசுப் சயீதி தெரிவித்தார்.
பேருந்தில் இருந்த பெரும்பாலோர் பலியாகினர். லாரியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து, ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமெனி அறிவித்த, அடுத்த மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 இலட்சம் ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருக்கும் என்ற அறிவிப்புக்கு அடுத்த நாளே நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள், ஒழுங்குமுறை இல்லாத போக்குவரத்து, அலட்சியமான வாகன ஓட்டுதல் ஆகிய காரணங்களால் விபத்துகள் பொதுவானவையாகவே உள்ளன. கடந்த டிசம்பரில் மத்திய ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு பேருந்து விபத்துகளில் குறைந்தது 52 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.