சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி, உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதன் என்பவரது மனைவி ராணி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி என்பவருக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராணி கடந்த 2000-ஆம் ஆண்டு நல்லதம்பியுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி, ராணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவானார்.
நீண்ட காலமாக இந்த வழக்கில் கொலையாளி பிடிபடாமல் இருந்து வந்த நிலையில், இந்த மர்மத்தை முடிவுக்குக் கொண்டு வர சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கௌதம்கோயல் உத்தரவின் பேரில், ஓமலூர் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், 25 ஆண்டுகளுக்கு முன் ராணியை கொலை செய்துவிட்டுத் தலைமறைவான நல்லதம்பி குறித்து தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையில், சொந்த ஊரை விட்டு வெளியேறிய நல்லதம்பி, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ரகசியமாக சொந்த ஊருக்கு வந்து உறவினர்களைப் பார்த்துச் சென்றது தெரியவந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அவரைப் பிடிக்க போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் உம்பிலிக்கம்பட்டிக்கு வந்த 60 வயதான நல்லதம்பியைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2000-ஆம் ஆண்டில் ராணி, தகாத உறவை துண்டித்து கொண்டதால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டு, உடனடியாக ஆந்திரா மாநிலத்திற்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. அங்கு ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து, நீண்ட காலம் தலைமறைவு வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். தற்போது பிடிபட்ட நல்லதம்பியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவடைந்த பிறகு, அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.



