2025 ஆம் ஆண்டும் பருவமழை காலம் தொடங்கிவிட்டது. பருவமழை குளிர்ச்சியையும் நிம்மதியையும் அளித்தாலும், சாலைகளில் வாகனம் ஓட்டும் சவாலையும் உடன் கொண்டு வருகிறது. நீர் தேங்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள், திடீர் பள்ளங்கள் ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பாகப் பயணிக்க, சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
நீர் தேங்கிய சாலைகளைத் தவிர்ப்பது அவசியம் :
முன்னால் செல்லும் வாகனம் பாதுகாப்பாக கடந்துவிட்டது என்பதற்காக, அதே பாதையைப் பின்பற்றி நாமும் செல்லலாம் என்று நினைக்கக் கூடாது. தண்ணீரின் ஆழம் தெரியாத நிலையில், அதைத் தவிர்ப்பதே சிறந்தது. அதிக ஆழமான நீரில் வாகனத்தை இயக்கினால், தண்ணீர் இன்ஜின் அல்லது கார்ப்ரேட்டர் குழாயில் நுழைந்து, வாகனம் பயணத்தின் நடுவில் நின்றுபோகும் அபாயம் உள்ளது. மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதே விவேகமானது.
நீரில் மூழ்கிய வாகனத்தை இயக்க முயற்சிக்க வேண்டாம் :
உங்கள் வாகனம் மழை நீரில் மூழ்கி இருந்தால், அதை ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பது மிகப்பெரிய தவறு. இது இயந்திரத்தை ‘ஹைட்ரோலாக்’ நிலைக்குத் தள்ளி, இயந்திரத்துக்கு நிரந்தரச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்து வாகனத்தைச் சரிசெய்த பிறகே இயக்க வேண்டும்.
டயரின் உறுதி (க்ரிப்) மிக முக்கியம் :
மழைக்காலத்தில் டயரின் பிடிப்பு (க்ரிப்) மிகவும் இன்றியமையாதது. பழைய, தேய்ந்த டயர்கள் மழை நீரில் எளிதில் வழுக்கி, வாகனத்தின் சமநிலையைக் குலைத்து விபத்தை ஏற்படுத்தலாம். டயரின் ‘ட்ரெட்’ ஆழம் குறைந்தபட்சம் 3 மிமீ இருக்க வேண்டும். விரிசல் அடைந்த அல்லது தேய்ந்த டயர்களை உடனடியாக மாற்றுவது பாதுகாப்பானது.
வைப்பர்களை சரிபார்க்கவும் :
மழையின்போது தெளிவான பார்வைக்கு வைப்பர்கள் அவசியம். தேய்ந்த வைப்பர் பிளேடுகள் பார்வையைத் தடை செய்யலாம். எனவே, மழைக்காலம் தொடங்கும்போதே வைப்பர்களை மாற்றி, விண்ட்ஷீல்ட் வாஷர் திரவத்தை நிரப்பி வைத்திருப்பது பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.
ஜன்னல்களில் பனி படர்வதை தவிர்க்க கவனம் :
மழை காலங்களில், வாகனத்தின் உட்புற மற்றும் வெளிப்புற வெப்பநிலை வேறுபாடு காரணமாக ஜன்னல்களில் எளிதில் மூடுபனி படியும். ஏர் ப்ளோயரை நேரடியாக விண்ட்ஷீல்டில் இயக்குவது இந்தப் பிரச்சினையை மோசமாக்கலாம். இதனால் தெளிவான பார்வை தடைபட்டு விபத்துகள் நேரலாம்.
அத்தியாவசியப் பொருட்கள் :
மழைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் போக்குவரத்து நெரிசல்கள் அல்லது வாகனப் பழுது காரணமாக தாமதம் ஏற்படலாம். எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிக்க, உங்கள் காரில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சில சிற்றுண்டிகளை வைத்திருப்பது பசி மற்றும் தாகத்தை தவிர்க்க உதவும்.
மரத்தடியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் :
மழைக்காலத்தில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பலத்த காற்று வீசும் போது மரக் கிளைகள் முறிந்து விழவோ அல்லது முழு மரமே சாய்ந்து வாகனத்தின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தவோ வாய்ப்புள்ளது.
அவசரகால எண்களை தயாராக வைத்திருங்கள் :
பழைய வாகனமோ அல்லது புதிய வாகனமோ எதுவாக இருந்தாலும், மழைக்காலத்தில் எந்நேரமும் எதிர்பாராத சிக்கல்கள் நேரலாம். எனவே, வாகன காப்பீடு மற்றும் சர்வீஸ் சென்டர் எண்களை உங்கள் செல்போனில் சேமித்து வைக்க வேண்டும். நீண்ட தூரப் பயணத்தின்போது, உங்கள் இருப்பிடத்தை (Live Location) குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதுடன், எப்போதும் ஒரு பவர் பேங்கையும் உடன் வைத்திருப்பது பாதுகாப்பை உறுதி செய்யும்.
Read More : பணம் மிச்சம்..!! இனி புது லென்ஸ் வாங்காதீங்க..!! கண் கண்ணாடியின் கீறல்களை மறைக்க எளிய டிப்ஸ் இதோ..!!



