ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, தான் கர்ப்பமானதை உறுதிப்படுத்திய 17 மணிநேரத்தில் ஆண் குழந்தை பிறந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவைச் சேர்ந்த சார்லோட் சம்மர்ஸ், 20, என்ற இளம்பெண், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பாத சார்லோட், மருத்துவர் கூறிவிட்டாரே என பரிசோதனை செய்தபோதுதான், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் சிக்கல் இருந்ததால், உடனடியாக பிரசவத்துக்கு ஏற்பாடு செய்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் காதலனுடன் திருமணம் செய்வதற்காக சில மாதங்கள் முன் தான் இரு குடும்பத்தாரும் பேசியுள்ளனர்.
தான் முன்னெச்சரிக்கையாக இருந்ததாகவும், மாதவிடாய் வழக்கமாக இருந்ததாகவும் மருத்துவர்களிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். இது ‘கிரிப்டிக்’ கர்ப்பம் எனப்படும் அரியவகை கர்ப்பம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ‘கருப்பையில், தொப்புள் கொடிக்கு பின்னால் குழந்தை மறைந்திருக்கும். இதனால், கர்ப்பம் தரித்தது கூட தெரியாது. மாதவிடாயும் வழக்கம் போல் இருக்கும்.’உடலிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் தெரியாது. இது மிகவும் அபூர்வமாக ஏற்படக் கூடியது’ என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.