மதுரையின் மண் வாசனை மாறாத சமையல் கலைக்கு ஒரு மகுடம் வைத்தாற்போல் திகழ்வதுதான் ‘சிக்கன் மிளகு சுக்கா’. காரசாரமான சுவையும், மூக்கை துளைக்கும் நறுமணமும் கொண்ட இந்த அசைவ உணவு, நாவிற்கு விருந்தளிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் சேர்க்கப்படும் நாட்டு மசாலாக்களால் உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. சளி மற்றும் இருமலுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படும் மிளகை அடிப்படையாகக் கொண்டு, மதுரையின் பாரம்பரிய முறையில் இந்த சுக்காவை வீட்டிலேயே எளிதாகச் செய்வது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : இந்தத் தரமான சுவையை தயார் செய்ய அரை கிலோ சிக்கன், 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மற்றும் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் அவசியம். மசாலா நறுமணத்திற்காக மூன்று ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சோம்பு, தலா ஒரு துண்டு பட்டை, மூன்று கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் சீரகம், தலா ஒரு ஸ்பூன் மிளகாய் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றைச் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை :
முதலில் மிளகு, சீரகம், சோம்பு உள்ளிட்ட முழு மசாலாக்களை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுத்து, நைசாகப் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இந்தச் சுக்காவிற்கு சுவையை தரும். அதன் பிறகு, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு கிளற வேண்டும்.
அடுத்ததாக, சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு மஞ்சள் தூள் தூவி எண்ணெயிலேயே வேகவிட வேண்டும். மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறிய பின், சிக்கன் மிருதுவாக வேகுவதற்கு தேவையான அளவு மட்டும் தண்ணீர் தெளித்து மூடி வைக்க வேண்டும். சிக்கன் முக்கால் பதம் வெந்தவுடன், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் ஸ்பெஷல் மிளகு மசாலா பொடியைத் தூவி, எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருளச் சுருளக் கிளறினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் மதுரை சிக்கன் மிளகு சுக்கா தயார்.



