சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலைப் பகுதியில் உள்ள கடற்கரையில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், கடற்கரை மணல் பரப்பில் தலையின் பின்புறம் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக மெரினா போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்த மயிலாப்பூர் உதவி ஆணையர் சீனிவாசன் மற்றும் மெரினா ஆய்வாளர் மோகன் தலைமையிலான குழுவினர், உயிருக்கு போராடியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், இன்று காலை 8 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி நகரைச் சேர்ந்த அந்தோணி (40) என்பதும், இவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. இவருக்குத் திருமணமான நிலையில், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்தோணிக்கு பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது, அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் மகள்களால் அந்தோணி தாக்கப்பட்டு விரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நேற்று இரவு தனது அக்காவுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட அந்தோணி, மெரினா கடற்கரையில் கள்ளக்காதலியை சந்திக்க வந்துள்ளார்.
நள்ளிரவில் இருவரும் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் அவர்களைச் சுற்றி வளைத்தது. பின்னர், அந்தக் கும்பல் ஆட்டோ டிரைவர் அந்தோணியை தலையில் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரமே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கொலையைச் செய்தவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Read More : பால், தயிர் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்..!! தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?



