அறிவியல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், சீன விஞ்ஞானிகள் மனித உருவ ரோபோ தாயின் உடலுக்குள் குழந்தையை வளர்க்கும் தொழில்நுட்பம் விரைவில் நடைமுறைக்கு வரலாம் என்று அறிவித்துள்ளனர்.
எப்படி செயல்படுகிறது? ரோபோவின் உடலுக்குள் செயற்கைக் கருப்பை பொருத்தப்படும். அதில் அம்னோடிக் திரவம் நிரப்பப்பட்ட சூழல் உருவாக்கப்படுகிறது. கருவிற்கு குழாய் மூலம் ஊட்டச்சத்து வழங்கப்படும். குழந்தை, வழக்கம்போல் ஒன்பது மாதங்கள் கருவில் வளரும். இந்தத் திட்டம் தற்போது கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டதாக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் ஜாங் கூறியுள்ளார்.
இதன் முன்மாதிரி அடுத்த ஆண்டு வெளியிடப்படலாம். இது சுமார் 100,000 யுவான்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக) விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோபோவின் உடலுக்குள் கரு எவ்வாறு பொருத்தப்படும் என்பதை நிபுணர்கள் இதுவரை முழுமையாகத் தெளிவுப்படுத்தாததால், கருத்தரித்தல் செயல்முறை நிச்சயமற்றதாகவே உள்ளது.
உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார். விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார். அதையே அடிப்படையாகக் கொண்டு இந்த ரோபோ தாய் திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் குழந்தையின்மை விகிதம் 2007-இல் 11.9% இருந்தது. 2020-இல் அது 18% ஆக அதிகரித்தது. இதற்கு தீர்வாகவே இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், கர்ப்பம் கொள்ள பெண்களின் பங்கு தேவையில்லையா? என்ற கேள்வி எழுகிறது. ஹார்மோன் ஒழுங்குமுறை, இயற்கையான உயிரியல் செயல்முறைகளை அறிவியலால் முழுமையாக பிரதியெடுக்க முடியுமா என்ற சந்தேகமும் மருத்துவ நிபுணர்களிடம் நீடிக்கிறது.
Read more: நேற்று வரை மக்களை நடுங்க வைத்த தங்கம் விலை.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?