டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது..
டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. தெரு நாய் கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.. தெருநாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு தடையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் அல்லது அமைப்புக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வு, 5,000 தெருநாய்களை தங்க வைக்கும் வசதியுடன் நாய் காப்பகங்கள் அமைக்கவும், போதுமான பணியாளர்கள் நியமித்து கருத்தடை, தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.. மேலும் தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம்.. மிகவும் ஆக்ரோஷமான, ராபிஸ் நோய் பாதித்த நாய்கள் பிடிக்கப்பட்டால் மீண்டும் பொதுவெளியில் விடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தெருநாய்களுக்கு பொதுவெளியில் உணவளிக்க கூடாது என்றும், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உணவளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறை ஏற்படுத்தப் போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.. தெரு நாய்களை கையாள்வது தொடர்பான நெறிமுறை உருவாக்க அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.. தெரு நாய்கள் தொடர்பாக அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்..