கேரள மாநிலம் ஆலுவாவை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் கிளைகளுடன் இயங்கி வரும் ஃபெடரல் வங்கியில் (Federal Bank), தற்போது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன் சேர்த்து மாதம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இது ஒரு நிரந்தரப் பணியிடமாகும். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் கடந்த டிசம்பர் 1, 2025 நிலவரப்படி 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு முக்கியமான நிபந்தனையாக, பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
வயது வரம்பைப் பொறுத்தவரை, பொதுப் பிரிவினர் 18 முதல் 20 வயதிற்குள்ளும் (1.12.2005 – 1.12.2007-க்குள் பிறந்தவர்கள்), எஸ்சி மற்றும் எஸ்டி (SC/ST) பிரிவினர் 18 முதல் 25 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வில் கணிதம், ஆங்கிலம் மற்றும் கணினி அறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும். தமிழகத்தில் சென்னை, ஈரோடு, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.federalbank.co.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினருக்கு ரூ.500-ம், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த கல்வித் தகுதிக்குக் கூடுதல் சம்பளம் கிடைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேலைதேடும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.



