குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதும், அதன்பின் குளிப்பதும் பலருக்கும் ஒரு பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பவர்கள் கூட, பனிப்பொழிவு காலங்களில் தண்ணீரை பார்த்தாலே அஞ்சி சில நாட்கள் குளியலைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், இந்தக் குளிர்காலச் சோம்பல் நம்மை மந்தமாக்குவதோடு, புத்துணர்ச்சியையும் பறித்துவிடுகிறது. குளிர்காலத்தில் தினமும் குளிப்பது அவசியமா? அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன? என்பது குறித்த ஒரு விரிவான மருத்துவ மற்றும் வாழ்வியல் அலசல் இதோ.
குளிர்காலத்தில் தினமும் குளிப்பது உடலைச் சுத்தமாக வைப்பதோடு மட்டுமல்லாமல், மனதிற்கும் பெரும் புத்துணர்ச்சியைத் தருகிறது. வெயில் காலத்தை விட குறைவாக வியர்த்தாலும், உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்கள், இறந்த செல்கள் மற்றும் காற்றில் உள்ள தூசி ஆகியவை சருமத் துளைகளை அடைக்கக்கூடும். தினமும் குளிப்பதன் மூலம் இவற்றை அப்புறப்படுத்தி, உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
குறிப்பாக, மிதமான வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ரத்த ஓட்டத்தைத் தூண்டி, தசைகளை தளர்த்துகிறது. இது குளிர்காலத்திற்கே உரித்தான சளி மற்றும் மூக்கடைப்புத் தொந்தரவுகளைக் குறைக்க உதவுவதோடு, உடலைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் ‘ரீசெட்’ (Reset) பட்டனாக செயல்படுகிறது.
இருப்பினும், குளிர்காலக் குளியலில் சில எச்சரிக்கைகளும் அவசியம். ஏற்கனவே வறண்ட காற்றினால் சருமம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் அதிக சூடான நீரில் குளிப்பது சருமத்தின் இயற்கை எண்ணெய் பசையை முற்றிலுமாக அகற்றிவிடும். இதனால் தோல் அரிப்பு, வெடிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல், தினசரி தலைக்குக் குளிப்பதும், அதிக வீரியமுள்ள ஷாம்புகளைப் பயன்படுத்துவதும் கூந்தலை வறட்சியாக்கி உடைந்து போக செய்யும். எனவே, நீண்ட நேரம் சுடுநீரில் குளிப்பதை தவிர்த்து, மிதமான வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதே சிறந்தது என தோல் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
Read More : தமிழ்நாட்டில் உருவானது புதிய அரசியல் கட்சி..!! இதுதான் எங்கள் நோக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!



