பெங்களூருவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 12 பேர் காயமடைந்தனர்..
பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் அருகே உள்ள சின்னயன்பாளையத்தில் இன்று காலை எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 12 பேர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டின் முதல் தளத்தின் கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன, அதே நேரத்தில் சுற்றியுள்ள 3க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தீ பரவியது… இந்த சம்பவம் அடுகோடி காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்தது.
சிலிண்டர் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. காலை 8:25 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. மேலும் ஒரு நிமிடத்திற்குள், காலை 8:26 மணிக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்..
இந்த சிலிண்டர் விபத்தில் இறந்தவர் முபாரக் (8) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த வெடிப்பு காரணமாக வில்சன் கார்டன் அருகே உள்ள சின்னயன்பாளையத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், பல குடியிருப்பாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது, மேலும் குண்டுவெடிப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
இந்த தகவல் கிடைத்தவுடன் அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும், உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணிகளும் நடந்து வருகிறது.. நிலைமையை மேற்பார்வையிட மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..