ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பாதுகாப்பற்ற சில செயலிகள் மூலம் வங்கி கணக்குகளில் உள்ள பணம் திருடப்படும் அபாயம் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, திரை பகிர்வு (Screen Sharing) வசதி கொண்ட 3 முக்கிய செயலிகளைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், ஆறாம் விரலைப் போல அனைவரின் கைகளிலும் தவழ்கின்றன. தொலைபேசி அழைப்புகள் முதல் பணப்பரிமாற்றம், ஆன்லைன் ஷாப்பிங் என அனைத்தும் விரல் நுனியில் சாத்தியமாகியுள்ளன. இந்த தொழில்நுட்ப வசதிகள் மக்களின் வேலைகளை எளிதாக்கினாலும், மறுபுறம் சைபர் குற்றவாளிகள் இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திப் புதுப்புது மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் செய்யும் ஒரு சிறிய தவறு, நம் வங்கி கணக்கில் உள்ள வாழ்நாள் சேமிப்பையே இழக்கச் செய்துவிடும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் இயங்கும் ’14C’ அமைப்பு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உலகில் மிகவும் பிரபலமான AnyDesk, TeamViewer மற்றும் QuickSupport ஆகிய 3 ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் செயலிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு செல்போன் அல்லது கணினியை இயக்கும் வசதியை அளிப்பவை. தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய இவை உருவாக்கப்பட்டிருந்தாலும், மோசடி கும்பல்கள் இவற்றைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களின் செல்போன் திரையைக் கண்காணித்து, அதன் மூலம் ரகசியத் தகவல்களைத் திருடி பண மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நம்பி இத்தகைய செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், நிதி இழப்புகளைத் தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. சைபர் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : 64 பைரவர்களின் ஆதிமூலம்.. ராவணன் அழிவை நிர்ணயித்த பைரவர் தலம்.. தமிழ்நாட்டில் எங்க இருக்கு தெரியுமா..?



