உணவுகள் டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக் டப்பாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில் வருகிற உணவை, வரவிருக்கிற ஆபத்தை உணராமல் குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள்வரை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
”டிவி, கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களில் இருக்கிற உலோகங்கள் மற்றும் மனிதர்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மெர்க்குரி, கேட்மியம் போன்றவற்றை நீக்கி விட்டு, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்கிறார்கள். அந்த பிளாஸ்டிக்கில்தான் பெரும்பாலும் ஹோட்டல்களில் உணவை பார்சல் செய்கிற கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களை தயாரிக்கிறார்கள். தவிர, பொம்மைகள் மற்றும் சில கிச்சன் உபயோகப்பொருள்களையும் தயாரிக்கிறார்கள்.
இதில் எங்கே பிரச்னை வருகிறது என்றால், டிவி, கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் எளிதில் தீக்கிரையாமல் இருக்க, அவற்றில் ஃபயர் ப்ரூஃப் ரசாயன பூச்சு கலந்திருப்பார்கள். இந்த ரசாயன பூச்சு, எலெக்ட்ரானிக் பொருள்களில் இருந்து மறுசுழற்சி மூலமாக தயாரிக்கப்பட்ட கருப்பு டப்பாக்களிலும் இருப்பதைக் கண்டறிந்து இருக்கிறார்கள். கருப்பு நிற பிளாஸ்டிக்கில் கார்பன் பிளாக் பிக்மெண்ட் என்கிற கருப்பு நிற நிறமி ஒன்றையும் சேர்க்கிறார்கள். இதுவும் புற்றுநோயை உருவாக்கத்தக்க காரணிகளில் ஒன்றாகவே மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. தவிர, பாலி அரோமெட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் இந்த கருப்பு நிற பிளாஸ்டிக்கில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வயிறு, கல்லீரல், சிறுநீரகல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
பலரும் இந்த டப்பாக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Readmore: செக்…! ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம்… இனி கட்டாயம்… பத்திர பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!