நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வாகனங்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வரும் நிலையில், வாகனங்களுக்குக் காப்பீடு எடுக்காதவர்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. காப்பீடு இல்லாமல் இயங்கும் வாகனங்களைப் பறிமுதல் செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த துங்கலா தனலட்சுமியின் கணவர் 1996 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். விபத்துக்குள்ளான காருக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்தை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுக்கவே, இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயிரிழந்தவரின் குடும்பத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர், “நாட்டில் கிட்டத்தட்ட 50%-க்கும் அதிகமான வாகனங்கள் காப்பீடு இல்லாமலேயே இயக்கப்படுகின்றன. காப்பீடு எடுத்த சிலரும் கூட, குழப்பமான விதிமுறைகளை சொல்லி நிறுவனங்கள் தொகையை மறுப்பதால், பல ஆண்டுகளாகச் சிக்கித் தவிக்கின்றனர்” என்று வாதிட்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், நாட்டில் பாதிக்கும் மேலான வாகனங்கள் காப்பீடு இல்லாமல் இருப்பது தீவிரமான சமூகப் பிரச்சனை என்று குறிப்பிட்டனர். மேலும் கூறுகையில், “போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வது போல, காப்பீடு எடுக்காத வாகனங்களையும் தற்காலிகமாகப் பறிமுதல் செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
மேலும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சிக்கலான விதிமுறைகளை கொண்டிருப்பதால், காப்பீடு எடுத்தவர்களும் எளிதில் தொகையை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வாகனக் காப்பீட்டு விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசும், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமும் (IRDAI) இணைந்து புதிய கொள்கை மாற்றங்களைக் கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



