செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகத்தையே தனது விரல் நுனியில் சுழல வைத்து வருகிறது. மருத்துவம் முதல் விண்வெளி ஆய்வு வரை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஏஐ, சமூக ஊடகங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாம் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களை ஒருமுறை மேய்ந்தாலே, கண்களைக் கவரும் ஏஐ வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், இந்த ஆச்சரியத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ‘டீப் ஃபேக்’ (Deepfake) போன்ற ஆபத்துகள், தற்போது சமூக பாதுகாப்பிற்கே சவாலாக மாறியுள்ளன.
உண்மையான வீடியோ எது, தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி எது என்பதை பிரித்தறிய முடியாத அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. குறிப்பாக, பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பது, அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களின் முகங்களை மாற்றிப் போலி வீடியோக்களை உருவாக்குவது என இந்தத் தொழில்நுட்பம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இதனால் மன உளைச்சலுக்கும், அவமானத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இத்தகைய அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், டிஜிட்டல் தளங்களை முறைப்படுத்தவும் மத்திய அரசு தற்போது அதிரடியான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, இனி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு ஏஐ வீடியோவிலும், அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிக்கும் ‘லேபிள்’ (Label) அல்லது வாட்டர்மார்க் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்குத் தெளிவான புரிதலை ஏற்படுத்தும். மேலும், ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ அல்லது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலோ ஒரு வீடியோ இருந்தால், அது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் அந்தத் தளம் அந்த வீடியோவை நீக்க வேண்டும் என அரசு கறாராக உத்தரவிட்டுள்ளது.
இனி பயனர்கள் வீடியோவைப் பதிவேற்றம் செய்யும்போதே, அந்த வீடியோ முழுவதுமாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது ஏஐ கொண்டு எடிட் செய்யப்பட்டதா என்பதைச் சுய உறுதிமொழி (Self-declaration) அளிக்க வேண்டியது அவசியமாகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு எடுத்துள்ள இந்த முக்கியமான விதிகள், வரும் பிப்ரவரி 20, 2026 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வர உள்ளன.
Read More : உலகை வலம் வந்த பிரதமர் மோடி..!! 4 ஆண்டுகளில் இத்தனை கோடி செலவு செய்துள்ளாரா..? வெளியான புள்ளி விவரங்கள்..!!



