சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (39), ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தபோதிலும், திருமண தகவல் மையங்கள் மூலம் மற்ற பெண்களையும் ஏமாற்றத் தொடங்கியுள்ளார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த, கணவனை இழந்த ஒரு இளம்பெண், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
திருமண தகவல் மையம் மூலம் இவருக்கு சுரேஷ்குமார் அறிமுகமாகியுள்ளார். அப்போது, சுரேஷ்குமார் தான் இன்னும் திருமணம் ஆகாதவர் என்றும், அந்தப் பெண்ணின் குழந்தைகளைத் தனது சொந்த குழந்தைகள் போல பார்த்துக் கொள்வேன் என்றும் கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
சுரேஷ்குமார் ஜிம் சென்று தனது உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இளம்பெண்களை கவர்ந்துள்ளார். கணவரைப் பிரிந்து அல்லது விவாகரத்து செய்து தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களின் குழந்தைகள் மீது அன்பாக இருப்பதாக பேசி, அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். அந்த இளம்பெண்ணும், சுரேஷ்குமாரும் பல நாட்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பூங்காவில் இருவரும் சந்தித்துள்ளனர். அங்கு, சுரேஷ்குமார் அந்த பெண்ணிடம் இருந்த 10 சவரன் நகையை திருடிவிட்டு, செல்போனை ஆஃப் செய்துவிட்டு, தலைமறைவாகியுள்ளார். நகையை இழந்த அந்தப் பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷ்குமாரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மீது நுங்கம்பாக்கம் மற்றும் கோடம்பாக்கம் காவல் நிலையங்களில் ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், இதேபோல் 8 பெண்களை ஏமாற்றி நகைகளையும், பணத்தையும் பறித்தது வெளிச்சத்திற்கு வந்தது.
சுரேஷ்குமார் 4 பெண்களை நேரடியாகவும், மற்ற 4 பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனது வசீகரப் பேச்சால் கவர்ந்து ஏமாற்றியுள்ளார். அவர் மீது புகார் அளித்த பெண்ணின் துணிச்சலான செயலால் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, கைதான சுரேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இதேபோல் ஏமாற்றப்பட்ட மற்ற பெண்கள் யாரும் இருந்தால், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : “என் பொண்டாட்டியை விட்ருடா”..!! கெஞ்சிய கணவன்..!! விடாத கள்ளக்காதலன்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!