தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த முறை வழக்கத்தைவிட மழைப்பொழிவு கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் என்றாலே வெள்ளப்பெருக்கு, மின் துண்டிப்புகள், எதிர்பாராத விபத்துகள், சாலை விபத்துகள் மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். எனினும், சில எளிமையான மற்றும் அத்தியாவசியமான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்தச் சிக்கல்கள் அனைத்திலிருந்தும் நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
பள்ளி, அலுவலகம் என பல்வேறு காரணங்களுக்காக வெளியில் செல்ல நேரிடும்போது, மழைநீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். நடந்து செல்லும்போதும் சரி, இரு சக்கர வாகனங்களை இயக்கும்போதும் சரி, தேங்கிய நீரில் செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் மின் விபத்துகள் மற்றும் சுகாதாரக் கேடுகளைத் தவிர்க்கலாம். திடீர் மழையில் நனையாமல் இருக்க, எப்போதும் குடை அல்லது ரெயின்கோட் போன்றவற்றை உடன் வைத்திருப்பது அவசியம். அதேபோல், வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மட்டுமே நம்பிச் செயல்பட வேண்டும்.
மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது, வீட்டிலுள்ள அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து வைப்பது அவசியம். கதவுகள், ஜன்னல்களை இறுக்கமாக மூடிவைப்பது பாதுகாப்பை உறுதி செய்யும். குறிப்பாக, ஈரமான கைகளுடன் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், குழந்தைகளை மின் சாதனங்களைச் சுற்றிலும் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்வது பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம்.
பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை, தண்ணீர் வெளியேறும் கால்வாய்களில் நெகிழி (பிளாஸ்டிக்) உள்ளிட்ட குப்பைகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும். அடைப்புகளை ஏற்படுத்தக்கூடிய குப்பைகளை அகற்றி, மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்வது வெள்ள அபாயத்தைக் குறைக்கும். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளில் மழை நீர் தேங்குவது கொசுக்கள் உற்பத்தியாக முக்கிய காரணமாக அமையும் என்பதால், அவற்றை அப்புறப்படுத்துவது மூலம் டெங்கு போன்ற காய்ச்சல்களைத் தவிர்க்கலாம். தேங்கிய நீரால் உருவாகும் கொசுக்கள் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால், மழைக்காலம் முடியும் வரை காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடிப்பதையே பழக்கப்படுத்திக் கொள்வது உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
மழையின் காரணமாக மின் துண்டிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மெழுகுவர்த்தி, டார்ச் விளக்குகள் மற்றும் அதற்கான பேட்டரிகளைச் சரிபார்த்து, போதுமான அளவில் வாங்கி வீட்டில் இருப்பு வைத்துக் கொள்வது அன்றாடச் சிரமங்களைத் தவிர்க்க உதவும். பலத்த காற்று வீசும்போது, மரத்தின் அடியிலோ அல்லது மரத்தின் அருகிலோ நிற்பதையோ, வாகனங்களை நிறுத்துவதையோ முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அத்துடன், அவசர உதவி எண்களை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் கையில் வைத்திருப்பது அவசரகாலங்களில் உதவும்.
சாலைப் பாதுகாப்பு மிக அவசியம் என்பதால், மழை சமயங்களில் வாகனங்களை மிக மெதுவாக இயக்க வேண்டும். சாலை ஈரமாக இருப்பதால், திடீரென பிரேக் பிடிப்பதோ அல்லது அதிவேகமாகச் செல்வதோ விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே, பாதுகாப்பான வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். அத்துடன், மழை நேரத்தில் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்குவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு உங்கள் இருப்பு குறித்துத் தெரியப்படுத்த உதவும். இந்த எளிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிப் பருவமழைக் காலத்தை நாம் பாதுகாப்பாகக் கடக்கலாம்.



