கிழக்கே போகும் ரயில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்யராஜுக்கும், ராதிகாவுக்கும் நடந்த ரகளையான சம்பவம் குறித்து ராதிகா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து தனது திரை பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குநர். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர். அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.
இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் பாக்யராஜ் அவ்வப்போது நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். வாகை சூட வா, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அட்டகாசமாக நடித்திருந்தார் அவர். இந்தச் சூழலில் கிழக்கே போகும் ரயில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்யராஜுக்கும், ராதிகாவுக்கும் நடந்த ரகளையான சம்பவம் குறித்து ராதிகா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதாவது கிழக்கே போகும் ரயில்தான் ராதிகாவின் முதல் படம். அந்தப் படத்தில் பாக்யராஜ் உதவி இயக்குநர். ராதிகாவுக்கு வசனங்கள் சொல்லிக்கொடுப்பது பாக்யராஜ்தானாம். ஒருமுறை வசனம் சொல்லிக்கொடுக்கும்போது வேண்டுமென்றே ராதிகா கிண்டல் செய்துகொண்டிருந்தாராம். உடனடியாக பாரதிராஜாவிடம் சென்ற பாக்யராஜ், நான் என்ன சொன்னாலும் அந்தப் புள்ள கேட்க மாட்டேங்குது என்று சொன்னாராம்,
உடனே ராதிகாவை அழைத்த பாரதிராஜா, என்ன அவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறியாம் என்று சொல்ல; இல்லையே சார் அவர் வேண்டுமென்றே சொல்கிறார் என்றாராம் ராதிகா. உடனே பாரதிராஜாவோ, எங்கே வசனத்தை சொல் பார்ப்போம் என்று கூறியதும்; வசனத்தை சொல்லி முடித்துவிட்டாராம்.
அதனையடுத்து பாக்யராஜை ராதிகா கோபமான வார்த்தைகளால் திட்டிவிட்டாராம். சிறிது நேரம் கழித்து பாக்யராஜிடம் சென்ற ராதிகா, உன்ன ரொம்ப திட்டிட்டேனா என்று கேட்க; அதற்கு பாக்யராஜ் விடு இங்கிலீஷலதானே திட்டுன எனக்கு ஒன்னும் புரியல என்று கேஷுவலாக எடுத்துக்கொண்டாராம்.