நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும், பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கி, தபால், நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள், மாநில போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை என சிலர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும், பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தினசரி கால அட்டவணைப்படி எந்த வித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் பேருந்துகள் இயக்கப்படுவதை தடுத்தால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.. பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பனிந்திர ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்..
மேலும் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலே பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: பாரத் பந்த் : இன்று பள்ளிகள், வங்கிகள் மூடப்படுமா? தமிழ்நாட்டில் பேருந்துகள் இயங்குமா?