நவீன உலகத்தின் வசதிகளில் பிளாஸ்டிக் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உலகம் முழுவதும் பரவி, சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். அவை பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடைவதால் உருவாகின்றன. மேலும், அழகுசாதனப் பொருட்கள், துணிகள் மற்றும் தொழில்துறை செயல்முறைகள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்தும் அவை உருவாகின்றன. முதலில் இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நீர், மண் மற்றும் காற்றில் காணப்பட்டன.
ஆனால் தற்போது நஞ்சுக்கொடி, மூளை, மற்றும் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளான விந்தணுக்கள், கருப்பைகளில் கூட காணப்படுகின்றன. இது கருவுறுதல் மற்றும் ஆரோக்கியம் குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், நேற்று (ஜூலை) பாரிஸில் நடந்த ஐரோப்பிய மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் சங்கத்தின் (ESHRE) 41வது ஆண்டு கூட்டத்தில், ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர்கள் 69 சதவீத ஃபோலிகுலர் திரவ மாதிரிகளிலும் (29 பெண்களிடமிருந்து எடுக்கப்பட்டது) 55 சதவீத விந்து மாதிரிகளிலும் (22 ஆண்களிடமிருந்து) மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினர். இதில், பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் செயற்கை பாலிமர்கள் ஆகும்.
கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள், பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் (PTFE) ஆகும், இது நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் காணப்படுகிறது. இது பெண்களின் மாதிரிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மற்றும் ஆண்களின் மாதிரிகளில் 40 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. பாலிஎதிலீன், பாலியூரிதீன், பாலிமைடு, PET, பாலிப்ரொப்பிலீன் மற்றும் பாலிஸ்டிரீன் போன்ற பிற பிளாஸ்டிக்குகளும் ஆண், பெண் மாதிரிகளில் காணப்பட்டன.
மூளை மற்றும் விந்தணுக்களில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை முன்னர் கண்டறிந்த நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான டாக்டர் மேத்யூ கேம்பென், புதிய கண்டுபிடிப்புகள் ஒரு எச்சரிக்கை என்று கருத்து தெரிவித்தார். “இது பிளாஸ்டிக் வெளிப்பாடு மற்றும் இனப்பெருக்க தகுதி குறித்த மேம்பட்ட ஆய்வுகளுக்கு களம் அமைக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பீதி அடைய வேண்டாம்; ஆய்வை விரிவுபடுத்தி, மைக்ரோபிளாஸ்டிக் விந்து அல்லது முட்டையின் தரத்தை பாதிக்குமா என்பதை ஆராய விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடலுக்குள் எப்படி நுழைகிறது? இந்த நுண்துகள்கள், நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவுகள், பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றின் வழியாக நம் உடலுக்குள் நுழைகின்றன. அந்த நுண்துகள்கள், ரத்தத்தின் ஊடாக முக்கிய உறுப்புகளுக்குள் புகுந்து, நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய், கருவுறுதலில் சிக்கல்கள் போன்ற பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நுண்ணிய பிளாஸ்டிக்குகள் வீக்கம், டிஎன்ஏ சேதம், ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இன்றுவரை, மனித கருவுறுதலில் எந்த நிரூபிக்கப்பட்ட விளைவும் இல்லை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். முன்னெச்சரிக்கையாக, நிபுணர்கள் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் பாட்டில்களைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றனர்.