தொண்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக உள்ளதாக World Updates நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகில் உள்ள கட்சிகளில் எது மிகவும் பெரியது என்பது பற்றி வேர்ல்ட் அப்டேட் (World Updates) என்ற நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கட்சியில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தான் அதிமுக ஆச்சரியமளிக்கும் இடத்தில் உள்ளது. நடிகராக இருந்து கொண்டு திமுகவில் செயல்பட்டு வந்தவர் எம்ஜிஆர். திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் அதிமுகவை உருவாக்கினார்.

அதன்பிறகு நடந்த தேர்தல்களில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றது. எம்ஜிஆர் தமிழகத்தில் முதல்வரானார். இதுவரை அதிமுகவில் எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வராக செயல்பட்டுள்ளனர். தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் பணி செய்ய தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் வேர்ல்ட் அப்டேட் நிறுவனம் உலகில் அதிக தொண்டர்கள் உள்ள டாப் 5 கட்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிமுக 7-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் அதிக தொண்டர்கள் உள்ள கட்சி என்ற வகையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் அதிமுக உள்ளதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த பட்டியலில் ஆம்ஆத்மி கட்சி 9-வது இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ-இன்சாப் என்ற கட்சி 10-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக டாப் 15 கட்சிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதன்மூலம் அதிமுகவை ஒப்பிடும்போது திமுக பின்தங்கி உள்ளது. இருப்பினும் திமுக எந்த இடத்தை பிடித்துள்ளது என்ற விவரத்தை வேர்ல்ட் அப்டேட் நிறுவனம் வெளியிடவில்லை.