பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்தியா முழுவதும் அரசியலில் புதிதாக களமிறங்கும் கட்சிகளுக்கு, குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கிய அவரது ஜன சுராஜ் கட்சி (ஜே.எஸ்.பி.) அடைந்துள்ள பின்னடைவு, தமிழகத்தின் புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பெரும் பாடமாக அமையும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
பீகார் தேர்தல் நிலவரப்படி, பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 136 இடங்களுடன் பெரும்பான்மை பெற்று முன்னிலையில் உள்ளது. மறுபுறம், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) தலைமையிலான கூட்டணி 70 இடங்களைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெறுவது, அங்கு அக்கட்சியின் பலவீனத்தை அப்பட்டமாக காட்டுகிறது.
இந்தச் சூழலில்தான், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிப்பது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. பிரச்சாரம், சாலைப் பேரணிகள், சமூக ஊடகப் பிரசாரம் என அனைத்து வகையிலும் அதிரடி காட்டியபோதும், பிகே-வால் தனது பிரபலத்தை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. அவரது கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் போகும் நிலை கூட ஏற்படலாம்.
தவெகவுக்கு பாடம் :
தேர்தல் வியூக நிபுணராக நடிகர் விஜய்க்கு ஆலோசனை வழங்கியவர் பிரசாந்த் கிஷோர். ஆனால், அவரது சொந்த மாநிலமான பீகாரிலேயே, மாற்று அரசியல் என்ற முழக்கத்துடன் தனியாக நின்ற அவரது கட்சிக்குக் கிடைத்துள்ள இந்தச் சவுக்கடி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு சரியான நேரத்தில் கிடைத்த அரசியல் அறிவுரை என்று வல்லுநர்கள் பார்க்கின்றனர்.
விஜய் கட்சிக்கு வல்லுநர்களின் அறிவுரை :
தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பல ஆண்டுக்கால பலமான அமைப்பு ரீதியான கட்டமைப்பையும், விசுவாசமான வாக்காளர் தளத்தையும் கொண்டுள்ளன. எனவே, தனது முதல் பெரிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் த.வெ.க., வெறும் நட்சத்திர பிம்பத்தையோ, ரசிகர் பட்டாளத்தையோ மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தவெக உடனடியாக வலுவான கள அணியை உருவாக்க வேண்டும், பூத் நிலை ஊழியர்களைச் சார்ந்த கடினமான களப் பணியில் இறங்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக த.வெ.க. இல்லை என்ற நடைமுறை சிக்கலையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அங்கீகாரம் இல்லாவிட்டால், 2026 தேர்தலில் வாக்குச் சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
பிரசாந்த் கிஷோரின் இந்த அனுபவம், அரசியல் என்பது வெறும் விளம்பரத்தால் அல்ல, ஆழமான உள்ளூர் தொடர்புகள், நம்பிக்கை மற்றும் முறையான கட்சி அமைப்பால்தான் இயங்குகிறது என்பதை தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்த சரியான பாடமாக அமைந்துள்ளது.
Read More : திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு கட்சியில் முக்கிய பதவி..!! அதிர்ச்சியில் அதிமுக..!!



