பீகாரின் நாளந்தா மாவட்டம் மலாவன் கிராமத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஆறுதல் கூறச் சென்ற கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் மற்றும் எம்எல்ஏ கிருஷ்ணா முராரி சரணை, கிராம மக்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் துரத்திச் சென்றுள்ளனர்.
சனிக்கிழமை, கங்கையில் புனித நீராடச் சென்றபோது, ஆட்டோ ஒன்று வேகமாக வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் எட்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க புதன்கிழமை அமைச்சர் ஆயுதமேந்திய காவலர்களுடன் கிராமத்திற்குச் சென்றார்.
இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிய கிராம மக்களுக்கு, “இந்த விவகாரம் பின்னர் விவாதிக்கப்படும்” என்று அமைச்சர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் கோபம் அடைந்து, மூங்கில் குச்சிகள் மற்றும் கற்களுடன் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவை விரட்டினர்.
சம்பவத்தின் போது அமைச்சர் மூன்று முறை கார் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளும் கட்சித் தொண்டர்களும் அவரைப் பாதுகாக்க போராடினர். அமைச்சர் தனது வேட்டியைப் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார். பாட்னாவில் பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டேவின் காரை மக்கள் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Read more: காலையில் வெறும் வயிற்றில் தேனுடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்!. அற்புத நன்மைகள் இதோ!