அமெரிக்க தொழில்நுட்பத் தொழில்முனைவோர் பில்கேட்ஸ் பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தனது கடந்த கால தொடர்புகள் குறித்து, கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், தாம் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிறுவனத்திற்குள் நடைபெற்ற ‘டவுன் ஹால்’ கூட்டத்தில் பேசிய பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தது “மிகப் பெரிய தவறு” என்றும், அந்த உறவு தொண்டு நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.
அந்த கூட்டத்தில் பேசிய பில் கேட்ஸ், “நான் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. எந்த சட்டவிரோதத்தையும் நான் பார்த்ததில்லை. தெளிவாகச் சொல்வதானால், எப்ஸ்டீனுடன் இருந்த பெண்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நான் நேரம் கழித்ததே இல்லை” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein files) தொடர்பாக வெளியான சில புகைப்படங்களில் பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்ததைப் பற்றி விளக்கம் அளித்த அவர், அந்தப் புகைப்படங்கள் சந்திப்புகளுக்குப் பிறகு, எப்ஸ்டீன் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரது உதவியாளர்களுடன் எடுத்தவை மட்டுமே என்றும் கூறினார். “என்னால் ஏற்பட்ட தவறின் காரணமாக மற்றவர்கள் சிக்கலில் சிக்கியதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
தண்டனை பெற்ற பிறகும் தொடர்ந்த சந்திப்புகள்
பில் கேட்ஸ், 2011ஆம் ஆண்டில் முதன்முறையாக எப்ஸ்டீனை சந்தித்துள்ளார். அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, 2008ஆம் ஆண்டு, சிறுமியை விபச்சாரத்திற்கு அழைத்ததாக எப்ஸ்டீன் குற்றம் ஒப்புக்கொண்டிருந்தார். இருந்தபோதும், 2014ஆம் ஆண்டு வரை அவருடன் சந்திப்புகளை பில் கேட்ஸ் தொடர்ந்ததாக கூறப்படுகிறது..
எப்ஸ்டீனின் பின்னணியை தாம் “சரியாக விசாரிக்கவில்லை” என்றும், அவரது பயணங்களை கட்டுப்படுத்தியிருந்த “18 மாதக் கால கட்டுப்பாடு” குறித்து தமக்குத் தெரியும் என்றும் பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார்.
2013ஆம் ஆண்டிலேயே தனது முன்னாள் மனைவி இருந்த மெலிந்தா பிரெஞ்ச் கேட்ஸ், எப்ஸ்டீன் தொடர்பாக கவலை தெரிவித்திருந்ததாக பில் கேட்ஸ் கூறினார். “அந்த விஷயத்தில் மெலிந்தா எப்போதும் சந்தேகமாகவே இருந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் விமானப் பயணங்கள்
பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் தனியார் விமானத்தில் பயணம் செய்துள்ளார். ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய இடங்களில் அவர் எப்ஸ்டீனுடன் நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், “நான் ஒருபோதும் இரவு தங்கவில்லை; எப்ஸ்டீனின் தீவிற்கும் செல்லவில்லை” என்று பில் கேட்ஸ் மறுத்துள்ளார்.
பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு எப்ஸ்டீன் சிறையில் இருந்தார்.. 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
ரஷ்ய பெண்களுடன் உறவு – ஒப்புதல்
அதே கூட்டத்தில், திருமண வாழ்க்கையின் போது ரஷ்ய பெண்களுடன் இரண்டு உறவுகள் இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார். “ஒருவர் ரஷ்ய ‘பிரிட்ஜ்’ விளையாட்டு வீராங்கனை; மற்றொருவர் ரஷ்ய அணு இயற்பியலாளர்” என்று அவர் கூறினார். இந்த உறவுகள் எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
2013ஆம் ஆண்டில் பில் கேட்ஸின் உறவுகளைப் பற்றி எப்ஸ்டீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல்கள் உள்ளன. ஆனால், பில் கேட்ஸின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் போரிஸ் நிகோலிக், அந்த மின்னஞ்சல்களை தாம் எழுதியதில்லை என்றும், அவற்றை அனுப்பச் சொல்லவில்லை என்றும் மறுத்துள்ளார்.
‘எப்ஸ்டீன் கோப்புகள்’ மற்றும் தொண்டு நிறுவனப் பாதிப்பு
கடந்த மாதம், அமெரிக்க நீதித்துறை ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டது. ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என அழைக்கப்படும் இந்த ஆவணங்களில், மின்னஞ்சல்கள், நேர்காணல் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பல முக்கிய நபர்களின் பெயர்கள் மீண்டும் விவாதத்துக்குள்ளாகின.
கேட்ஸ் அறக்கட்டளை விளக்கம்
இந்த மாதத்தின் தொடக்கத்தில், கேட்ஸ் அறக்கட்டளை, “எப்ஸ்டீனுக்கு எந்த நிதியும் வழங்கப்படவில்லை; அவரை எப்போதும் பணியில் அமர்த்தியதில்லை” என்று விளக்கம் அளித்தது. பில் கேட்ஸ், இந்த சர்ச்சை மற்றும் புதிய ஆவணங்கள், அறக்கட்டளையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டார்.
“எங்கள் அறக்கட்டளையின் மதிப்புகளுக்கு இது முற்றிலும் எதிரானது. எங்கள் பணியில் நற்பெயர் மிகவும் முக்கியமானது” என்றும் அவர் கூறினார்.
உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்று
2000ஆம் ஆண்டில் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிந்தா இணைந்து தொடங்கிய கேட்ஸ் அறக்கட்டளை, உலகளவில் சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி வழங்கும் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
எப்ஸ்டீனுடன் தன்னுடைய தொடர்புகள், அவரின் பெயரைக் ‘மெருகூட்ட’ உதவியிருக்கலாம் என்றும் பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார். இருப்பினும், தாம் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்ற நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
Read More : 70 வயது மணமகன், 22 வயது மணமகள்..! இந்த ஜோடி ஹனிமூனுக்கு எங்கே போகிறார்கள் தெரியுமா..?



