சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் கொத்துக்கொத்தாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அடையாறு, ஈசிஆர் மற்றும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த நிலையில், அவை ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இது குறித்துப் பேசியுள்ள கால்நடை மருத்துவர் கிஷோர் குமார், பீகாரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பறவைகள் மூலமாகவே இந்தத் தொற்று தமிழகத்திற்குள் ஊடுருவியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். சுமார் 1000-க்கும் மேற்பட்ட காகங்கள் இதுவரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், சென்னையைத் தாண்டி அண்டை மாவட்டங்களான திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டிலும் இதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனிதர்களுக்கு ஆபத்தா..?
பறவைகளிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நிபுணர்கள், தற்போது சென்னையில் கண்டறியப்பட்டுள்ள H5N1 வகை வைரஸ் மனிதர்களைத் தாக்குவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்று ஆறுதல் அளித்துள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பறவைகளைக் கையாள்பவர்கள், இறைச்சிக் கடை ஊழியர்கள் ஆகியோர் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வீதியோரங்களில் பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், பொதுமக்கள் அதனைத் தொடாமல் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது அவசியமாகும்.
சிக்கன் மற்றும் முட்டை பிரியர்கள் கவனத்திற்கு :
இந்தச் சூழலில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவர் கூறுகையில், “சிக்கன் மற்றும் முட்டையை முழுமையாகத் தவிர்க்கத் தேவையில்லை; ஏனெனில் அவை உடலுக்குத் தேவையான புரதத்தை வழங்குகின்றன. ஆனால், நாம் சமைக்கும் முறையில் கூடுதல் கவனம் தேவை. வைரஸ் கிருமிகள் அதிக வெப்பத்தில் அழிந்துவிடும் என்பதால், இறைச்சியை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். அதேநேரம், ‘ஆஃப் பாயில்’ (Half Boil), பச்சையான முட்டை மற்றும் அரைகுறையாகச் சமைத்த அசைவ உணவுகளைத் தற்போது முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது” என்று எச்சரித்துள்ளார்.
Read More : எந்தவித பிணையமும் இல்லாமல் ரூ. 20 லட்சம் வரை கடன்..! ரிசர்வ் வங்கி சொன்ன குட்நியூஸ்..!



