மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2023ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டவர்கள் அரவிந்த் – நந்தினி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற இளைஞருடன் நட்பு உருவானது. அன்குஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நந்தினி பங்கேற்ற வீடியோக்களை பார்த்து அரவிந்த் ஆத்திரமடைந்தார்.
மேலும், சமீபத்தில், நந்தினி தனது நண்பர்களுடன் ஆட்டோவில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற கணவர் அரவிந்த், அவர்களை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால் நந்தினியை சுட்டார். இதில் படுகாயமடைந்த நந்தினி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற அரவிந்தை, மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், இந்த பிரச்சனைக்குக் காரணம் நீண்டகால பகையே என்பது தெரியவந்துள்ளது. அரவிந்துக்கு ஏற்கனவே இன்னொரு மனைவியும், ஒரு குழந்தையும் இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த நந்தினி போலீசில் புகார் அளித்ததால், அரவிந்த் ஏற்கனவே ஒருமுறை காரை ஏற்றி நந்தினியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
பிறகு, சமீபத்தில் அரவிந்த் போலி வீடியோக்களை உருவாக்கி அவதூறு பரப்பியதால், நந்தினி தனது நண்பருடன் சென்று எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் வழியிலேயே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம், திருமண உறவில் ஏற்படும் தவறான புரிதல்கள் மற்றும் சந்தேகங்கள் எவ்வாறு கொடூரமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



