சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. மார்ச் 1-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.. மேலும் திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள் திருச்சியில் நடக்கும் பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்..
மறுபுறம் அதிமுக தலைமையும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.. முதல் கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய இணையமைச்சர் எல். முருகன், நயினார் நாகேந்திரன் இருவரும் இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினர்.. அந்த சந்திப்பின் போது பாஜக தரப்பில் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்ததாக கூறப்படுகிறது..
அதில் குறைந்தபட்சம் 30 முதல் 35 தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறதாம்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4-ல் வென்றது.. இந்த முறை 30 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அது அதிமுகவுக்கு பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.. ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது..
மேலும் பாஜக கொடுத்த தொகுதி பட்டியலில் சென்னையில் மட்டும் 3 தொகுதிகள் உள்ளதாம்.. ஆயிரம் விளக்கு, தி நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது. கோவையில் தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், திருத்தணி, காஞ்சிபுரம், ஆலங்குளம், தென்காசி, அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, பழநி, விளவங்கோடு உள்ளிட்ட தொகுதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது..
அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளையும் பாஜக கேட்டுள்ளதால் இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.. இன்னும் சில நாட்களில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ள நிலையில், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.



