மேற்கு வங்கத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட நாக்ரகாட்டாவுக்குச் சென்ற பாஜக தலைவர்கள் குழுவினருக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்பைகுரி மாவட்டத்தின் தூவர்ஸ் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் வட மால்டாஹா நாடாளுமன்ற உறுப்பினர் ககன் முர்மு கடுமையாக காயமடைந்தார். மேலும், சிலிகுரி தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கோஷ் உட்பட பலரும் தாக்கப்பட்டனர்.
தாக்குதலின் போது தலைவர்கள் சென்ற வாகனங்கள் சேதமடைந்ததாகவும், காயமடைந்தோர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பின்னால் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆதரவாளர்கள் உள்ளதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் தனது ‘X’ பதிவில்,“பழங்குடியினத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ககன் முர்மு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்றபோது TMC குண்டர்களால் தாக்கப்பட்டார். மம்தா பானர்ஜி கொல்கத்தா கார்னிவலில் கலந்து கொண்டிருக்கும் வேளையில், மாநில நிர்வாகம் அமைதியாக இருக்கிறது. உண்மையில் மக்களுக்கு உதவுபவர்கள் தாக்கப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமையகம், தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.