திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் மத நல்லிணக்க சூழலை சீர் குலைக்க பாஜக, ஆர்.எஸ்,எஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.. திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது..
2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி, வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.. ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீப ஏற்றி சொல்கிறார்கள்.. மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பாஜகவின் அரசியல் வியூகம்.. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து டி.ஆர். பாலு அவர்கள் பேசிய போது, இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜிஜு மிரட்டுகிறார்..
இன்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் மக்களவையில் பொய் பிரச்சாரம் செய்கிறார்.. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் எங்களுக்காக எழுப்பின.. திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.. நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்..” என்று தெரிவித்தார்..
முன்னதாக திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்..
பின்னர் மக்களவை மீண்டும் கூடியது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.. அப்போது திமுக எம்.பி டி.ஆர். பாலு “ திருப்பரங்குன்றம் விவகாரம் கவலை அளிக்கிறது.. திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகே தீபம் ஏற்றி மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்.. வழக்கத்தை மீறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள சுயநல சக்திகளால் வகுப்புவாத மோதல்கள் தூண்டப்பட்டுள்ளது.. இந்த விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்.. அவரின் தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. அங்கு மத மோதலை உருவாக்கப் பார்க்கின்றனர் என்று தெரிவித்தார்..
ஆனால் ஜி.ஆர். சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என டி.ஆர். பாலு பேசியதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.. டி.ஆர் பாலு கூறியது போல் நாட்டின் எந்த நீதிபதியையும் உள்நோக்கத்துடன் குறிப்பிட முடியாது என்று கூறினார்.. உயர்நீதிமன்ற நீதிபதியை எப்படி இவ்வாறு குறிப்பிட முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர் டி.ஆர் பாலுவின் இந்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்.. இதை தொடர்ந்து டி.ஆர் பாலுவின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதை தொடர்ந்து அவரின் கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : உஷார்..! வைரலாகும் 19 நிமிட வீடியோ! ஆர்வத்தில் கிளிக் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கின் மொத்த பணமும் காலி..!



