பீகார் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பீகாரில் உள்ள தனது கிளர்ச்சித் தலைவர்கள் மீது பாஜக தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. பீகாரைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..
நரேந்திர மோடி தலைமையிலான அரசில் மின் அமைச்சர் பதவியை வகித்த இவர், முன்னாள் மத்திய உள்துறை செயலாளராகவும் இருந்தவர், கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நிலையில் அவர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது..
ஆர்.கே. சிங் பல என்.டி.ஏ தலைவர்களின் ஊழல் மற்றும் கூட்டணி நிலை குறித்து விமர்சித்து வந்தார்.. மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக கேள்வி எழுப்பினார். குறிப்பாக மோகராமா பகுதியில் நடந்த வன்முறையை நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் சரியாக கையாளவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஆர்.கே சிங் தொடர்ந்து கட்சித் தலைவர்களை வெளிப்படையாக விமர்சித்ததே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கட்சியின் ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை பாஜக தலைமை எடுத்துள்ளது… மேலும் பீகார் பாஜக முன்னாள் எம்.எல்.சி அசோக் குமார் அகர்வால் மற்றும் அவரது மனைவி, கடிதார் மாநகராட்சி மேயர் உஷா அகர்வால் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இருவருக்கும் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும் படிஅறிவிக்கப்பட்டுள்ளது, தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் கடுமையான ஒழுங்கு மற்றும் உட்கட்சி பிரச்சனைகளை சரிசெய்யும் முனைப்பை இது காட்டுகிறது.



