பாஜக தேசிய தலைவர் பதவிக்கான போட்டியில் நிர்மலா சீதாராமன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
2020 முதல் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ஜே.பி நட்டா வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் 2023 இல் முடிந்தது, ஆனால் மக்களவைத் தேர்தல் வரை கட்சியை வழிநடத்துவதற்காக பாஜக அவரின் பதவிக்காலத்தை 2024 வரை நீட்டித்தது. இந்த நிலையில், பாஜக தனது தேசிய தலைவரை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது..
அடுத்த பாஜக தலைவர் யார்? என்பது குறித்து ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் அதே வேளையில், கட்சிக்கு முதல் பெண் தலைவரை நியமிக்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் சில பாஜக பெண் தலைவர்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபடுகின்றன. பாஜகவின் தேசிய தலைவர் பட்டியலில் உள்ளது யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது..
நிர்மலா சீதாராமன்
பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் 2019 முதல் நிதியமைச்சராக இருந்து வருகிறார், பாஜக தேசிய தலைவர் பதவிக்கு முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார், கட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவர். தமிழ்நாட்டை சேர்ந்த அவரை தேசிய தலைவராக நியமிப்பது பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.., ஏனெனில் தமிழ்நாட்டில் தான் பாஜக பலவீனமாக உள்ளது.. சமீபத்தில் அவர் ஜே.பி. நட்டா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை கட்சி தலைமையகத்தில் சந்தித்தார்.
டி. புரந்தேஸ்வரி
ஆந்திராவின் பாஜக தலைவராக இருந்த டி. புரந்தேஸ்வரியும் தேசியத் தலைவர் பதவியை பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கத்தின் ஆபரேஷன் சிந்தூர் குழுவிலும் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.
வானதி ஸ்ரீனிவாசன்
வானதி ஸ்ரீனிவாசன் பாஜககவின் மகளிரணி தேசியத் தலைவராக பதவி வகித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில், அவர் நடிகரும் மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) நிறுவனருமான கமல்ஹாசனை தோற்கடித்து, தமிழ்நாட்டின் கோவை (தெற்கு) தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் 1993 முதல் பாஜகவில் இருந்து வருகிறார். 2022 இல் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினரானார்.
பாஜக ஏன் பெண் தலைவரை தேர்வு செய்கிறது?
பாஜகவின் தேசிய தலைவராக ஒரு பெண்ணை நியமிக்கும் யோசனைனை ஆர்எஸ்எஸ் ஆதரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தேர்தல் சுழற்சிகளில், குறிப்பாக மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றிகளைப் பெறுவதில் பெண் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். எனவே ஒரு பெண்ணை கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் அமர்த்தும் பாஜகவின் முடிவுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்..