ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகிலுள்ள நவ்காம் பகுதி காவல் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தற்செயல் வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஹரியானாவின் பாரிதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட ‘வைட் காலர்’ பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில் பெருமளவு வெடி மருந்து குவியலில் இருந்து மாதிரிகளை எடுக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் மாதிரி எடுக்கும் பணியில் இருந்ததால், இந்த வெடி விபத்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது என்று அதிகாரிகள் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு அருகிலிருந்த ஒரு வீட்டின் சிசிடிவி காட்சியில், விபத்தின் தாக்கம் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த காட்சி, சுற்றுவட்டாரத்தில் பரவலான சேதத்தை ஏற்படுத்திய வெடி விபத்தின் அதிர்ச்சி அலை மற்றும் அதன் பின் உருவான அழிவின் தடங்களை வெளிப்படுத்துகிறது.
மற்றொரு வீடியோவில், தீயணைப்பு படையினர் மிகுந்த புகையுடன் எரிவதை அணைக்க போராடும் காட்சி பதிவாகியுள்ளது. வெடிப்பு ஏற்பட்ட இடம் முழுவதும் பரவலாக சிதைவுகள் குவிந்திருந்தன. பல வாகனங்கள் தீப்பிடித்தும் காணப்பட்டன. மேலும், வெடி விபத்தின் தீவிரத்தால் மனித உடல் பாகங்கள் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளுக்கு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் சில குடியிருப்பாளர்களும் வெடிப்பின் அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர்.
இந்த பகுதியில் ஜெய்ஷ்-இ–முகமது அமைப்பின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வழக்கை உடைத்தது நவ்காம் காவல் நிலையம். ஹரியானாவின் ஃபரீதாபாதில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் ஒரு பகுதி காவல்துறையின் நுண்ணறிவு ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் 360 கிலோ வெடிபொருட்களில் பெரும்பகுதி நவ்காம் காவல் நிலையத்திலேயே சேமிக்கப்பட்டிருந்தது.
ஒயிட் காலர் பயங்கரவாதம்
ஜம்மு காஷ்மீர் போலீஸ், கடந்த திங்கள்கிழமை மதியம், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளை தாண்டி செயல்பட்ட “ஒயிட் காலர்” பயங்கரவாத நெட்வொர்க்கை முறியடித்ததாக அறிவித்துள்ளது. இந்த குழு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்காயிடா தொடர்புடைய அன்சார் ஃகஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையது என்றும் போலீஸ் தெரிவித்தது.
இந்த விசாரணையில், சுமார் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஃபரீதாபாத் அல்-பலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புள்ள 3 மருத்துவர்கள்—அதீல் அஹ்மத் ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது உள்ளனர்.
இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதாவது திங்கள்கிழமை மாலை செங்கோட்டை அருகே ஒரு சிக்னல் புள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்; மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அடுத்த நாள் காலை, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் உமர் நபியின் பெயரும் வெளிவந்தது. வெடித்த ஹூண்டாய் i20 காரை ஓட்டியது இவரே என தொடக்க தகவல்கள் கூறுகின்றன.
இந்த “பயங்கரவாத சம்பவத்தை” விசாரித்து வரும் தேசிய விசாரணை முகமை (NIA) அதிகாரிகள் பேசிய போது “ பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நபியை பீதியடையச் செய்திருக்கலாம். இதனால் அவர் திடீரென தங்கியிருந்த இடத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” என்று தெரிவித்தனர்..
Read More : வாகனத்தில் ஃபாஸ்ட்டேக் இல்லை என்றால் அதிக கட்டணம்…! இன்று அமலுக்கு வந்த புதிய நடைமுறை…!



